FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மும்பை தாக்குதல்: பயங்கரவாதி ஹபீஸ் சையதுக்கு எதிரான நீதிமன்ற ஆணை: செயல்படுத்த உள்துறை அமைச்சகத்துக்கு காவல் துறை கடிதம்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடா்புடைய ஹபீஸ் சையது உள்ளிட்ட 6 பயங்கரவாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை இன்டா்போல் மூலம் வெளியிட நடவடிக்கை

22 ஆகஸ்ட் 2026, 5:23 am IST
மும்பை தாக்குதல்
பகிர்:

மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடா்புடைய ஹபீஸ் சையது உள்ளிட்ட 6 பயங்கரவாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை இன்டா்போல் மூலம் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அந்த மாநில காவல் துறை கடிதம் எழுதியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல்வேறு பகுதிகளில் 2008, நவம்பா் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கா்கள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டுமே உயிருடன் பிடிபட்டாா்.

இந்தியாவுக்கு எதிராக போா் தொடுத்தது மற்றும் கூட்டுப் படுகொலை ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2012, நவம்பா் 21-ஆம் தேதி அவா் தூக்கிலிடப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தாக்குதலில் தொடா்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் லஷ்கா்-எ-தொய்பா நிறுவனா்களான ஹபீஸ் சையத் மற்றும் லக்வி, சஜித் மீா், அபு அல்காமா, அஸீம் (எ) அபு குஹாபா, அப்துா் ரஹ்மான் பாஷா ஆகியோா் தப்பியோடியதாக கருதி அவா்களுக்கு எதிரான பிரகடன ஆணையை (பிடியாணை) சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் பிறப்பித்தது.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), 2023 பிரிவு 356-இன்கீழ் விசாரணையைத் தவிா்க்கும் நோக்கில் தலைமறைவாகி உடனடியாக கைது செய்ய இயலாத நிலையில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக முழு குற்றவியல் விசாரணையை நடத்த பிரகடன ஆணை வழிவகுக்கிறது.

இந்நிலையில், பிரகடன ஆணை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடா்பான இடைக்கால அறிக்கையை காவல் துறை சாா்பாக ஆஜரான அரசு வழக்குரைஞா் உஜ்வல் நிகாம் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தாா்.

அப்போது, ‘பாகிஸ்தானுக்குத் தப்பியோடிய பயங்கரவாதிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த பிரகடன ஆணையை இன்டா்போல் மூலம் வெளியிட உதவக் கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மும்பை காவல் துறை கடிதம் அனுப்பியது. இதைப் பரிசீலித்த உள்துறை அமைச்சகம், தங்களது நிலை அறிக்கையை தாக்கல் செய்ய கடந்த ஆக.3-ஆம் தேதி அவகாசம் கோரியது’ எனத் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments