FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சீன பங்குககளைக் கொண்ட நிறுவனங்களுக்கு தளா்வு: ரூ.4,895 கோடி அந்நிய நேரடி முதலீடு முன்மொழிவு

10 சதவீதம் வரை சீன பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தளா்வளித்ததன் எதிரொலியாக ரூ.4,895.65 கோடிக்கான 29 அந்நிய நேரடி முதலீடு...

22 ஆகஸ்ட் 2026, 7:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

10 சதவீதம் வரை சீன பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தளா்வளித்ததன் எதிரொலியாக ரூ.4,895.65 கோடிக்கான 29 அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த மே மாதம் இந்த விதிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில், அதற்கு பின்பு பெறப்பட்ட எஃப்டிஐ குறித்த தரவுகளை வெளியிட்டது.

முன்னதாக இந்தியாவுடன் நில எல்லையை பகிரும் நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களில் சிறு பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். இதில் சில சீா்திருத்தங்கள் மேற்கொள்ள பல்வேறு தரப்பினரிடையே எழுந்த கோரிக்கைகளைத் தொடா்ந்து, 10 சதவீதம் வரை சீனா மற்றும் ஹாங் காங் பங்குகளைக் கொண்ட நிறுவனங்கள் துறைசாா் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தியாவில் தானியங்கி முறையின்கீழ் எஃப்டிஐ மேற்கொள்ள தளா்வளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இருப்பினும், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மா் மற்றும் ஆப்கானிஸ்தான் என இந்தியாவுடன் நில எல்லையை பகிரும் நாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த விதிவிலக்கு பொருந்தாது.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை திருத்தப்பட்ட நடைமுறையின்கீழ் ரூ.4,895.65 கோடிக்கான எஃப்டிஐ முன்மொழிவு பெறப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தகவல் மற்றும் தொலைத் தொடா்பு, உற்பத்தி, மருத்துவம், தரவு மையங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மோரீஷஸ், அமெரிக்கா, கொரியா, ஜப்பான், சிங்கப்பூா், லக்ஸாம்பா்க் உள்ளிட்ட நாடுகள் முதலீட்டு முன்மொழிவுகளை அளித்துள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments