நிகர அந்நிய நேரடி முதலீடு குறைந்ததன் பின்னணி
வெளிநாட்டு முதலீடுகளின் தன்மை, அவற்றின் தாக்கம் மற்றும் நிகர அந்நிய முதலீடு குறித்த புள்ளிவிவரங்கள் தவறாகவும் புரிந்து கொள்ளப்படுகின்றன.
- முனைவர் அ.ஜ. ஹாஜா முகைதீன்
வெளிநாட்டு முதலீடுகளின் தன்மை, அவற்றின் தாக்கம் மற்றும் நிகர அந்நிய முதலீடு குறித்த புள்ளிவிவரங்கள் தவறாகவும் புரிந்து கொள்ளப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டுக்கு தொழில்நுட்பம், பிராண்டுகள், மேலாண்மைத் திறன்கள் மற்றும் உற்பத்தித் திறன்களைக் கொண்டு வந்து உற்பத்தி அல்லது வணிக நடவடிக்கைகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து நிர்வாகம், செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டைபெறுகிற முதலீடு அந்நிய நேரடி முதலீடு எனப்படுகிறது.
உற்பத்தி, சேவைத் துறைகளில் மேற்கொள்ளப்படுவது உண்மையான அந்நிய நேரடி முதலீடாகும். வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடுகளும் அந்நிய முதலீட்டில் அடங்கும்.
Advertisement
Advertisement
நாட்டுக்கு வந்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டிலிருந்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்ற முதலீட்டைக் கழித்த பிறகு எஞ்சுவதே நிகர அந்நிய நேரடி முதலீடு. இந்தியாவில் மொத்த அந்நிய நேரடி முதலீட்டு வரவுகள் வலுவாகவே இருந்தபோதிலும், 2020-21-ஆம் ஆண்டில் 44 பில்லியன் டாலர் என்ற உச்சத்தை எட்டியிருந்த நிகர அந்நிய நேரடி முதலீடு, 2024-25-இல் ஒரு பில்லியன் டாலருக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இது நமது பொருளாதாரத்தின் பலவீனத்துக்கான அறிகுறி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், மொத்த அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்ந்து வலுவாக இருப்பதை பொருளாதாரத்தின் பலமாகக் கருதுகிறார் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர். வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை தாய்நாட்டுக்கு அனுப்புவதும், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடுகளுமே நிகர அந்நிய நேரடி முதலீடு குறைந்ததற்குக் காரணம் என்கிறார் அவர்.
வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் ஈட்டிய ஈவுத்தொகையை தனது தாய்நாட்டுக்கு அனுப்பும்போது, அது செலுத்தல் சமநிலை கணக்கின் நடப்புக் கணக்கில் முதலீட்டு வருமானத்தின் கீழ் பதிவு செய்யப்படும். வெளிநாட்டுக்கு ஈவுத்தொகை டாலரில் வெளியேறுவதால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து ரூபாய் மதிப்பு குறையுமே தவிர நிகர அந்நிய முதலீடு குறையாது. ஏனெனில், முதலீடுகளுக்கு கிடைத்த லாப ஈவுத்தொகை மட்டுமே வெளியேறுகிறது. முதலீடுகள் வெளியேறவில்லை; முதலீடுகள் வெளியேற்றம் நடப்புக் கணக்கில் வராது.
நிகர அந்நிய நேரடி முதலீடு குறைந்ததற்குக் காரணம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போதிய லாபத்தை சம்பாதித்த பிறகு தங்களது பங்குகளை பல்வேறு நிதிசார் வழிமுறைகள் மூலமாக விற்று முதலீட்டிலிருந்து வெளியேறி, அதன்மூலம் கிடைக்கும் முதலீட்டு மூலதனத்தையும் லாபத்தையும் தங்கள் நாட்டுக்கு எடுத்துச் செல்வதுமாகும். முதலீடுகள் வெளியேற்றம் செலுத்தல் சமநிலையின் நிதிக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன. முதலீடு வெளியேற்றத்தை மட்டுமே நிகர அந்நிய நேரடி முதலீட்டைக் கணக்கிடுவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது, செலுத்தல் சமநிலை கணக்கின் அடிப்படை விதியாகும்.
அந்நிய நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்காக கொண்டுவரும் முதலீடுகளுடன், ஒரே நிறுவனக் குழுமத்தின் துணை நிறுவனங்களுக்கு இடையேயான பங்கு பரிமாற்றங்கள், ஏற்கெனவே செயல்படும் இந்திய நிறுவனங்களைக் கையகப்படுத்துதல், வெளி வர்த்தகக் கடன்கள் மற்றும் ஏற்கெனவே வெளியிடப்பட்ட மாற்றத்தக்க கடன் பத்திரங்களை பங்குகளாக மாற்றுதல் போன்ற கணக்கியல் மற்றும் உரிமை மாற்றங்களும் மொத்த அந்நிய நேரடி முதலீட்டு புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படுகின்றன.
இதனால், நாட்டுக்கு உண்மையில் எவ்வளவு புதிய வெளிநாட்டு முதலீடு வந்துள்ளது என்பதைத் துல்லியமாக அறிய முடியாது. 2014-15 முதல் 2025-26 வரை இந்தியாவுக்கு வந்த சுமார் 560 பில்லியன் டாலர் பங்கு முதலீடுகளில் சுமார் 40 பில்லியன் டாலர் புதிய முதலீடுகள் அல்ல; அது கணக்கியல் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு பரிவர்த்தனைகளால் ஏற்பட்டதாகும்.
சமீபத்திய நான்காண்டுகளில் வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் திறன் மேம்பாட்டுக்கு உதவும் உற்பத்தித் துறைக்கு வந்த உண்மையான அந்நிய நேரடி முதலீடு, நாட்டின் பொருளாதாரத்துக்கு நேரடியாகப் பலனளித்த மொத்த அந்நிய முதலீட்டு வரவுகளில் வெறும் 10.6% மட்டுமே.
கடந்த நான்காண்டுகளில் முதலீட்டு விலக்கல், ஈவுத்தொகை அறிவுசார் சொத்துரிமை மற்றும் ராயல்டி கட்டணங்கள் வழியாக வெளியேறிய முதலீடுகளின் மதிப்பு 344.4 பில்லியனை எட்டியுள்ளது. இதில் முதலீட்டு விலக்கல் மற்றும் மூலதனத்தை திரும்பக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றின்மூலம் மட்டுமே 178.9 பில்லியன் வெளியேறியுள்ளது.
இந்தியாவுக்குள் புதிய முதலீடாக ஒரு டாலர் வந்தால் இந்தியாவை விட்டு 1.50 டாலர் வெளியேறுகிற நிலை ஏற்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு டாலர் உள்ளே வந்தால் 56 சென்ட்கள் மட்டுமே வெளியேறின.
அந்நிய முதலீடுகள் பல்வேறு வடிவங்களில் பன்னாட்டு சந்தைகளில் நுழையவும் வெளியேறவும் செய்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் அந்நிய முதலீடுகளின் மொத்த உள் வரவுகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வது சிக்கல்களை உருவாக்கும்.
ஆகவே, அந்நிய முதலீடுகளின் தரம், நோக்கம், பொருளாதாரத்தில் நீண்ட காலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டும், புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டும் கொள்கைகளை வகுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.