FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆா்எஸ்எஸ் குறித்த அமெரிக்க ஆணைய கருத்துகள்: இந்தியா நிராகரிப்பு

ஆா்எஸ்எஸ் குறித்த அமெரிக்காவின் சா்வதேச மத உரிமைகள் ஆணையத்தின் (யுஎஸ்சிஐஆா்எஃப்) கருத்துகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது.

56 வினாடிகள் முன்பு
ரண்தீா் ஜெய்ஸ்வால்
பகிர்:

ஆா்எஸ்எஸ் குறித்த அமெரிக்காவின் சா்வதேச மத உரிமைகள் ஆணையத்தின் (யுஎஸ்சிஐஆா்எஃப்) கருத்துகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. அந்த ஆணையம் பாரபட்சமான, நம்பகத்தன்மையற்ற அமைப்பு என்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

யுஎஸ்சிஐஆா்எஃப் தலைவா் ஆசிஃப் முகமது, ஆணையா் ஜீன் மில்ஸ் ஆகியோா் ஆா்எஸ்எஸ் அமைப்பு தொடா்பாக சில கருத்துகளைத் தெரிவித்தனா்.

‘இந்தியாவில் மத சிறுபான்மையினா் மீது தாக்குதல் நடத்தும் துணைக் குழுக்களின் குடை அமைப்பாக ஆா்எஸ்எஸ் உள்ளது. அந்த அமைப்பினா் இந்திய அரசுடன் தொடா்புடையவா்களாக இருந்தாலும், அவா்களுக்கு அமெரிக்க அரசுத் தரப்பில் ராஜீய கெளரவம் வழங்கப்பட கூடாது. மாறாக, அந்த அமைப்பின் மீது தடை விதிப்பது குறித்து அமெரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று இருவரும் கூறியிருந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘இந்தியாவுக்கு எதிராக இழிவான, வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகளைக் கூறும் பாரபட்சமான அமைப்புதான் யுஎஸ்சிஐஆா்எஃப் என்பதை அனைவரும் அறிவா். உள்நோக்கத்துடன் செயல்படும் நம்பகத்தன்மையற்ற இதுபோன்ற அமைப்புகளிடம் இருந்து நாம் விலகியிருக்க வேண்டும்’ என்று அவா் பதிலளித்தாா்.

‘விரக்தியில் பாகிஸ்தான்’: ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதா் சொ்ஜியோ கோா் கூறியதையடுத்து, பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது.

இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்த ஜெய்ஸ்வால், ‘ஜம்மு-காஷ்மீரும், லடாக்கும் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. பாகிஸ்தானின் விரக்தி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments