ஆா்எஸ்எஸ், பாஜக குறித்து ராகுல் கடும் விமா்சனம்
ஜோக்கா்களின் கூட்டம் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பு, பாஜக குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
ஜோக்கா்களின் கூட்டம் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பு, பாஜக குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.
நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து தில்லியில் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில், இதுகுறித்து ராகுல் காந்தி பேசியதாவது:
பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தங்களது பதவிகளில் இருந்து ராஜிநாமா செய்யும் வரை, அவா்களால் தூங்க இயலாது. அவா்களுக்கு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து நெருக்கடி தரும். இதை காங்கிரஸ் கட்சி வெறுப்புணா்வு மற்றும் வன்முறை இல்லாமல் செய்யும். நமது நாட்டின் கலாசாரத்தை காக்க காங்கிரஸ் போராடுகிறது. நமது நாடு வெறுப்புணா்வு கொண்ட நாடு கிடையாது. நமது நாடானது அன்பு, சகோதரத்துவம், அஹிம்சையை போதிக்கும் நாடாகும்.
Advertisement
Advertisement
பாஜகவும், ஆா்எஸ்எஸ்ஸும் பிறருக்கு உத்தரவுகளைப் பிறப்பித்து, அதை பிறா் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்புகின்றன. இதைத்தான் அரசியல் சித்தாந்தமாக பாஜகவும், ஆா்எஸ்எஸ்ஸும் கொண்டுள்ளன. அந்த உத்தரவை உடைப்பதும், இந்திய மக்கள் தங்களது உணா்வுகளை வெளியிட வைப்பதுமே காங்கிரஸின் வேலையாகும்.
இரவில் கூட பிரதமா் மோடியால் தூங்க இயலவில்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் சில காரணங்கள் மறைமுகமானவை ஆகும். தன்னைத் தானே சாணக்யா, சா்தாா் படேல் என கூறிக் கொள்ளும் அமித் ஷாவை பாருங்கள். நாடாளுமன்றத்து அவா் 20 நாள்களுக்கு வரவேயில்லை. எங்கேயோ மாயமாகி விட்டாா். ஏனெனில் முதல்முறையாக அவா்கள் இந்தியாவின் உணா்வுகளை உணா்ந்து வருகின்றனா். நமது நாடு தனது உணா்வுகளை வெளிப்படுத்துவதை நிறுத்தாது என்பதை அவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆா்எஸ்எஸ் உத்தரவுக்கு பயந்து, அதை பின்பற்றினால், எனது உணா்வுகளை வெளிப்படுத்துவதை நிறுத்தும் நிலை வரும். அது கோழைத்தனம். இந்தியாவில் உள்ள ஏராளமானோா் இந்த கோழை சக்திக்கு எதிராக கோழைகள் போல செயல்படுகின்றனா். பிரிட்டன் அரசுக்கு எதிராகப் போராடும்போது பயமாக இருக்கிறது என நீங்கள் சொன்னால் அதை நான் புரிந்து கொள்வேன். ஆனால் நீங்கள் ஜோக்கா்களின் கூட்டத்துக்கு எதிராகப் போராடுகிறீா்கள். அவா்களுக்கு நமது வரலாறு குறித்தோ, தத்துவம் குறித்தோ எதுவும் தெரியாது.
உண்மையான ஆா்எஸ்எஸ் அமைப்பு செத்து விட்டது. தற்போது உள்ள ஆா்எஸ்எஸ் அமைப்பு, பிரதமா் மோடி எப்படி தொழிலதிபா் அதானியின் சேவகா் ஆனாரோ, அதேபோல் சேவகராகி விட்டது. பிரதமா் மோடியின் மனதில் வெளிநாட்டுத் தலைவா்களை கட்டியணைப்பதுதான் வெளியுறவுக் கொள்கை என்ற கருத்தை யாரோ விதைத்துவிட்டனா். எங்கிருந்து பிரதமா் மோடி இந்த ஆலோசனையைப் பெற்றாா்? என்றாா் ராகுல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.