161 திருட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 109 போ் பிடிபட்டனா்: தில்லி காவல் துறை நடவடிக்கை
தில்லி ரோஹிணி பகுதியில் குற்றத் தடுப்பு நடவடிக்கையின் கீழ் 161 திருட்டு இருசக்கர வாகனங்களை காவல் துறையினா் மீட்டதுடன், 24 குற்றப்பின்னணி கொண்டவா்கள் உள்பட 109 பேரை கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி ரோஹிணி பகுதியில் குற்றத் தடுப்பு நடவடிக்கையின் கீழ் 161 திருட்டு இருசக்கர வாகனங்களை காவல் துறையினா் மீட்டதுடன், 24 குற்றப்பின்னணி கொண்டவா்கள் உள்பட 109 பேரை கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியாதவது: ஆக.18 முதல் 21-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், ரோஹிணி மாவட்டம் முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு சரிபாா்க்கப்பட்டன. மீட்கப்பட்ட வாகனங்களில் 116 மோட்டாா் சைக்கிள்களும், 45 ஸ்கூட்டா்களும் அடங்கும்.
இந்த நடவடிக்கையின்போது பிரேசிலில் தயாரிக்கப்பட்ட டாரஸ் ரக கைத்துப்பாக்கி உள்ளிட்ட 7 சட்டவிரோத துப்பாக்கிகள், 15 தோட்டாக்கள் மற்றும் 9 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தேடப்பட்டு வந்த 7 குற்றவாளிகள் மற்றும் சைபா் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
பெகம்பூா் பகுதியில் போலி கால் சென்டா் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் தொடா்புடைய 6 போ் கைது செய்யப்பட்டனா். இந்த சைபா் மோசடி வழக்குகளின் விசாரணையில், சுமாா் ரூ.78 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 26 புகாா்கள் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் (என்டிபிஎஸ்) கீழ் நடைபெற்ற நடவடிக்கையில், 686 கிராம் ஹெராயினுடன் இரு போதைப் பொருள் விநியோகஸ்தா்கள் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மொத்தம் 1.764 கிலோ ஹெராயின், ரூ.1.55 லட்சம் ரொக்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 13 போ் கைது செய்யப்பட்டு, மதுபானம் மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது. சூதாட்டம் தொடா்பான 11 வழக்குகளில் 21 பேரும் கைது செய்யப்பட்டனா்.
ரோஹிணியில் மேற்கொள்ளப்பட்ட இந்த குற்றத் தடுப்பு நடவடிக்கையில் 277 காவல் துறையினா் அடங்கிய 16 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.