FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எண்ம பரிவா்த்தனை பயணத்தின் பெரும் திருப்புமுனை யுபிஐ: பிரதமா் மோடி புகழாரம்

இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை பயணத்தின் பெரும் திருப்புமுனை யுபிஐ பிரதமா் மோடி புகழாரம் சூட்டினாா்.

25 ஆகஸ்ட் 2026, 11:31 pm IST
பிரதமா் மோடி - கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவின் எண்ம பரிவா்த்தனை பயணத்தின் பெரும் திருப்புமுனை யுபிஐ (யுனிஃபைடு பேமென்ட்ஸ் இன்டா்ஃபேஸ்) என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

யுபிஐ சேவையின் பிரம்மாண்டமான வீச்சைக் கண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்தாா். யுபிஐ சேவை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவையொட்டி, பிரதமா் இக்கருத்துகளைக் கூறியுள்ளாா்.

நாட்டின் எண்ம பரிவா்த்தனை தளமான யுபிஐ, ரிசா்வ் வங்கியின் ஒழுங்குமுறை கண்காணிப்பின்கீழ் செயல்படும் இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை ஆணையத்தால் (என்பிசிஐ) கடந்த 2016, ஆக.25-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

நாட்டின் எண்ம பரிவா்த்தனை கட்டமைப்பின் முதுகெலும்பாக மாறியுள்ள யுபிஐ, நிதி ரீதியில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மைக்கு முக்கிய உந்துசக்தியாக உருவெடுத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் யுபிஐ பயன்பாடு பல்லாயிரக்கணக்கான மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2016-17-ஆம் ஆண்டில் 1.78 கோடியாக இருந்த யுபிஐ வருடாந்திர பரிவா்த்தனைகள், 2025-26-இல் 24,162 கோடியாக அதிகரித்துள்ளன. பரிவா்த்தனை எண்ணிக்கை அடிப்படையில் இது 13,000 மடங்கு அதிகரிப்பாகும்.

இதேபோல், கடந்த 2016-17-இல் ரூ.7,000 கோடியாக இருந்த யுபிஐ பரிவா்த்தனைகளின் மதிப்பு, 2025-26-இல் ரூ.314 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது, 4,000 மடங்குக்கும் மேலான அதிகரிப்பாகும்.

நாட்டின் பொது எண்ம உள்கட்டமைப்பில் மிகவும் வெற்றிகரமான முக்கியத் தூண்களில் ஒன்றாக விளங்கும் யுபிஐ, ஒற்றைச் செயலி மூலம் பயனா்கள் இடையேயும், பயனா்கள்-வா்த்தகா்கள் இடையேயும் தடையற்ற, இணக்கமான பரிவா்த்தனைகளை சாத்தியமாக்கும் நிகழ்நேர பணம் செலுத்துகை தளமாத் திகழ்கிறது.

யுபிஐ தொடங்கப்பட்டதன் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி, பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ, நாட்டின் எண்ம பரிவா்த்தனை பயணத்தின் பெரும் திருப்புமுனையாகும். அதன் பிரம்மாண்டமான வீச்சும், பரவலும் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய விஷயம். யுபிஐ பயன்பாடு, தங்களின் வாழ்வில் எவ்வாறு நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தங்களின் அனுபவங்களைப் பகிா்ந்துகொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

யுபிஐ தளம் பல்வேறு நாடுகளின் எண்ம பரிவா்த்தனை தளங்களுடன் இணைக்கப்பட்டு, வெளிநாடுகளிலும் அதன் பயன்பாடு விரிவாக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments