உ.பி.யில் 28 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பு உள்ளது: யோகி ஆதித்யநாத்
உ.பி.யில் 7 மாதங்களுக்குத் தேவையான 28 லட்சம் டன்கள் சர்க்கரை கையிருப்பு உள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளிவரும் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அடுத்த 7 மாதங்களுக்குத் தேவையான 28 லட்சம் டன்கள் சர்க்கரை கையிருப்பு உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் சர்க்கரைத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிரத்திற்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநிலமான உ.பி., நாட்டின் சர்க்கரை தேவையை பூர்த்தி செய்வதற்காக பங்களித்து வருகின்றது.
இதுபற்றிப் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “அக்டோபர் 15 முதல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் மீண்டும் உற்பத்தியைத் தொடங்கி 90 லட்சம் டன்கள் (9000 லட்சம் குவிண்டால்) சர்க்கரையை உற்பத்தி செய்யவுள்ளோம். அதற்கேற்ற உற்பத்தித் திறன் உத்தரப் பிரதேசத்திடம் உள்ளது” என்றார்.
Advertisement
Advertisement
உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை என்று சில நாள்களுக்கு முன் கூறிய யோகி, கள்ளச் சந்தையில் சர்க்கரை விற்பனை மற்றும் விநியோக பாதிப்பு போன்றவற்றைத் தடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில் உற்பத்தி பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், சர்க்கரை இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நாட்டின் பிற பகுதிகளில் சர்க்கரை தட்டுப்பாடு நிலவுவதாக ஊகங்கள் கிளம்பியுள்ளது.
சர்க்கரை ஆலைகள் மற்றும் கலால் துறையின் கூடுதல் செயலாளர் வீணா குமாரி மீனா கூறுகையில், “அடுத்தாண்டு ஜனவரி - பிப்ரவரி வரை மாநிலத்தின் நுகர்வுத் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவு சர்க்கரை கையிருப்பு உள்ளது. தேவைப்பட்டால், மற்ற மாநிலங்களின் சர்க்கரைத் தேவையைப் பூர்த்தி செய்ய கையிருப்பில் உள்ள சர்க்கரையை எடுத்துக்கொள்ள மத்திய அரசிடம் உபி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தின் கையிருப்பை வைத்து நாடு முழுவதும் இரு மாதங்களுக்கான சர்க்கரை தேவையைப் பூர்த்தி செய்யமுடியும்.
அக்டோபரில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டு அடுத்தகட்ட சரக்குகள் வரும்முன் தற்போதுள்ள கையிருப்பைத் தீர்க்கவேண்டும் என்பது மட்டுமே இப்போதைக்கு கவலை” என அவர் தெரிவித்துள்ளார்.
விலை உயர்வு பற்றிப் பேசுகையில், “மகாராஷ்டிரத்தில் மொத்த விற்பனையாளர்களின் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறால் சமீபத்தில் விலையுயர்வு ஏற்பட்டிருக்கலாம். இதனால், நாடு முழுவதும் சர்க்கரைத் தட்டுப்பாடு ஏற்பட்டதாக வதந்திகள் கிளம்பியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் தற்போது சர்க்கரைத் தட்டுப்பாடு இல்லையென்றாலும் சமீப ஆண்டுகளில் அங்கு உற்பத்தி குறைந்துள்ளது. 2023-24 ஆண்டுகளில் 104.13 லட்சம் டன்களாக இருந்த உற்பத்தி, 2024-25 இல் 92.45 லட்சம் டன்களாகவும், 2025-26 இல் 89.52 லட்சம் டன்களாகவும் குறைந்துள்ளது.
எத்தனால் உற்பத்தி 2023-24 இல் 152.4 கோடி லிட்டரில் இருந்து, 2025-26 இல் 225 கோடி லிட்டராக உயர்ந்துள்ள நிலையில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.
ஆனால், கூடுதல் செயலாளர் மீனா, சர்க்கரை உற்பத்தியை எத்தனால் பாதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
CM Yogi Adityanath has stated that Uttar Pradesh has a sugar stock of 28 lakh tonnes, sufficient for seven months.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.