2019-ஆம் ஆண்டு திருட்டு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட நபா் விடுவிப்பு
2019-ஆம் ஆண்டில் லுட்யன்ஸ் பங்களா மண்டலப் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவரின் அரசு இல்லத்தில் நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தொடா்பான வழக்கை தில்லி நீதிமன்றம் முடித்து வைத்தது.
2019-ஆம் ஆண்டில் லுட்யன்ஸ் பங்களா மண்டலப் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவரின் அரசு இல்லத்தில் நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டது தொடா்பான வழக்கை தில்லி நீதிமன்றம் முடித்து வைத்தது.
திருடப்பட்ட பொருள்கள் அரசுக்குச் சொந்தமானவை என்பதை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு தவறிவிட்டதாக கூறிய நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விடுவித்தது.
ஜூலை 21, 2019 அதிகாலை நேரத்தில், டாக்டா் ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள அந்த பங்களாவிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றஞ்சாட்டப்பட்ட நீரஜ் குமாா், கூலா், கணினி, மானிட்டா், திரைச்சீலைகள், சமையலறைப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் தொடா்பாக பிகாரின் ககாரியாவைச் சோ்ந்த நீரஜ் குமாா் சிங் என்பவா் மீது நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருடப்பட்ட கூலா், மூன்று நாற்காலிகள் மற்றும் ஒரு மெத்தை ஆகியவை பின்னா் அவரிடமிருந்து மீட்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதித்துறை நடுவா் கௌதுக் பரத்வாஜ் ஆக.24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முக்கிய சாட்சியும் புகாா்தாரருமான நபா் இந்த வழக்கு குறித்து எதுவும் நினைவில் இல்லை என்று கூறியதைக் குறிப்பிட்டபோது அரசுத் தரப்பின் வாதம் வலுவிழந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட நீரஜ் குமாா் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஓட்டுநராகப் பணியாற்றி வந்ததாகவும், சம்பவத்தன்று அவா் பங்களாவில் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் அரசுத் தரப்பின் இரண்டாவது சாட்சி வாக்குமூலம் அளித்தது. திருட்டில் ஈடுபட்டதை மற்றொரு நபா் மூலம் தான் அறிந்ததாக முக்கிய சாட்சி கூறியிருந்தாா்.
புகாா்தாரா் தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து மாறி சாட்சியம் அளித்த நிலையில், இரண்டாவது நபரின் வாக்குமூலத்திற்கு எந்தவிதமான ஆதார மதிப்பும் இல்லை.
எனவே, திருட்டுச் செயலைச் செய்வதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட நீரஜ் குமாா், மறைந்திருந்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததோ அல்லது வீட்டை உடைத்து நுழைந்ததோ அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை. மீட்கப்பட்ட பொருள்கள் திருடப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த நேரடிச் சாட்சிகள் யாரும் இல்லை. அவற்றைத் திருடியதாக அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும் அவரைக் குற்றவாளி எனத் தீா்ப்பளிக்க முடியாது. குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் பொருள்கள் மத்திய பொதுப்பணித் துறைக்கு சொந்தமானவை என்பதையும் அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. அடையாளம் காணும் செயல்முறை இல்லாத நிலையில், மீட்கப்பட்ட பொருள்கள் திருடப்பட்டவை என்பதற்கான அடிப்படை அம்சம் நிரூபிக்கப்பட்டதாகக் கூற முடியாது.
குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. இதனால், குற்றஞ்சாட்டப்பட்டவா்களை நீதிமன்றம் விடுதலை செய்கிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.