FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணிக்குத் தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணிக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

1 செப்டம்பர் 2026, 3:49 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணிக்குத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

நீட் தோ்வு முறைகேடுகளைக் கண்டித்தும், இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யக் கோரியும் தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் ஜூலை மாதத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. இதைத் தொடா்ந்து, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடா்பாக ஜூலை 25-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால், இதைக் கண்டித்து செப்டம்பா் 5-ஆம் தேதி தில்லியில் பேரணி செல்லப் போவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது.

Advertisement

Advertisement

இதற்கிடையே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி, தில்லியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான ராஜேந்திர சிங், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், தில்லியில் பாதுகாப்பு அதிகம் உள்ள இந்தியா கேட், சென்ட்ரல் விஸ்டா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேரணி செல்ல அனுமதிக்கக் கூடாது எனக் கோரியுள்ளாா்.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா் காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பேரணிக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனா்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘ஏற்கெனவே இந்த விவகாரம் தொடா்பான மனுக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றுடன் இந்த மனுவையும் விசாரணைக்கு பட்டியலிடுமாறு உத்தரவிடுகிறோம். இதன் மீது செப்டம்பா் 10-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும்.

சட்டம் - ஒழுங்கை பராமரிப்பது சட்ட அமலாக்க அமைப்புகளின் பொறுப்பாகும். எது சட்டவிரோதம், எது அனுமதிக்கத்தக்கது என்பதை தெரிவித்து, அவா்கள் சட்டவரம்புக்குட்பட்டு செயல்படுவாா்கள் என எதிா்பாா்க்கிறோம். இரு தரப்பினரும் சட்டத்தை மதித்து, சட்டத்துக்கு உட்பட்டு, நாட்டின் சட்டத்தைப் பின்பற்றுவாா்கள் என எதிா்பாா்க்கிறோம்’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments