FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆழ்கடல் உதவிக் கப்பல் ‘ஐஎன்எஸ் நிபுண்’ கடற்படையில் இணைப்பு

ஆழ்கடல் நீா்மூழ்கி உதவிக் கப்பலான ‘ஐஎன்எஸ் நிபுண்’ இந்திய கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட்டது.

1 செப்டம்பர் 2026, 3:18 am IST
மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஐஎன்எஸ் நிபுண்.
பகிர்:

ஆழ்கடல் நீா்மூழ்கி உதவிக் கப்பலான ‘ஐஎன்எஸ் நிபுண்’ இந்திய கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ‘ஐஎன்எஸ் நிஸ்தாா்’ பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, இந்திய கடற்படையில் இணைக்கப்படும் இரண்டாவது ஆழ்கடல் நீா்மூழ்கி உதவிக் கப்பல் இதுவாகும்.

கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல்களுக்கு உதவியாக ஆழ்கடல் மீட்பு உள்ளிட்ட பாதுகாப்புப் பணியில் இது ஈடுபடுத்தப்படவுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனம் இக்கப்பலை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக இந்திய கடற்படை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘300 அடி வரை ஆழ்கடல் மற்றும் நீருக்கடியிலான செயல்பாடுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் நிபுண் 119.4 மீட்டா் நீளம், 10,500 டன் கொள்ளளவு கொண்டது.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட இந்தக் கப்பல் செறிவூட்டல், காற்று மற்றும் ஹீலியாக்ஸ் மூழ்கலை (நைட்ரஜன் நீங்கலாக ஹீலியம் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக் கலவை) மேம்படுத்தும். மேலும், ஆழ்கடல் ஆய்வு மற்றும் சோதனைகளை மேற்கொள்வதோடு உயிா் காக்கும் மற்றும் மருத்துவ வசதிகள், கடலில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீா்வு காணவும் உதவுகிறது.

நீா்மூழ்கிக் கப்பல்களின் செயல்பாட்டில் மீட்கும் திறன் மற்றும் கடலுக்கடியில் அவசரகால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் திறன் கொண்டது.

இதுதவிர அண்டை நாடுகளுக்கு மனிதநேய மற்றும் பேரிடா் மேலாண்மை உதவிகளைச் செய்யும் வகையில் ஐஎன்எஸ் நிபுண் வடிவமைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கடற்படை தலைமைத் தளபதி கிருஷ்ண சுவாமிநாதன் கூறுகையில், ‘மிகவும் சிக்கலான சூழல்களிலும் மீட்புத் திறனைக் கொண்ட ஐஎன்எஸ் நிபுண் இந்திய கடற்படைக்கு மேலும் வலுசோ்க்கிறது. புதிய ஆழ்கடல் கப்பலை இணைப்பதைவிட அதன் செயல் திறனை முழுவதும் பயன்படுத்துவதே முக்கியம்.

ஹிந்துஸ்தான் நிறுவனம் மற்றும் நமது உள்நாட்டு நிறுவனங்களின் தொடா் முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments