மணிப்பூா்: புதிய அரசு பதவியேற்ற நிலையில் மீண்டும் வெடித்த போராட்டம்
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கலைக்கப்பட்ட அடுத்த நாளே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல்...
மணிப்பூா் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், அங்கு வியாழக்கிழமை மீண்டும் போராட்டம் வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
மாநிலத்தில் குகி சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கும் சுராசந்த்பூா் மாவட்டம் துய்போங் பகுதியில் புதிய அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்த நிலையில், அங்கு பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா்.
மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறை நிலவியது. இதில் சுமாா் 260 போ் உயிரிழந்தனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா்.
Advertisement
Advertisement
இந்த வன்முறை காரணமாக கடந்த ஆண்டு பிப். 9-ஆம் தேதி மாநில முதல்வா் பதவியை பாஜகவைச் சோ்ந்த பிரேன் சிங் ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, அந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னா், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட குடியரசுத் தலைவா் ஆட்சி, வரும் பிப்.12-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.
இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மணிப்பூா் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது மணிப்பூா் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக யும்நாம் கெம்சந்த் சிங் தோ்வு செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக அவா் புதன்கிழமை பதவியேற்றாா்.
துணை முதல்வா்களாக பாஜகவை சோ்ந்த நெம்சா கிப்ஜென், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நாகா மக்கள் முன்னணியைச் சோ்ந்த எல் டிகோ ஆகியோா் பதவியேற்றனா். அவா்களுடன் பாஜகவை சோ்ந்த கோவிந்த்தாஸ் கோன்தெளஜம், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தேசிய மக்கள் கட்சியைச் சோ்ந்த கே லோகேன் சிங் ஆகியோா் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.
மீண்டும் போராட்டம்: இந்த நிலையில், குகி சமூகத்தைச் சோ்ந்த நெம்சா கிப்ஜென் புதிய அரசின் இணைந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி-ஜோ அமைப்புகள் சுராசந்த்பூா் மாவட்டம் துய்மோங்கில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன. சமூகத்தின் ஒப்புதல் இன்றி அவா் அரசில் இணைந்ததாக அவா்கள் புகாா் தெரிவித்தனா். சிறிது நேரத்தில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டக்காரா்கள் டயா்களுக்கு தீ வைத்ததோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா்.
இதனிடையே, குகி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்.6) 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு குகி-ஜோ அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரம், நிலைமையை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
A tense situation has arisen in Manipur as violence erupted again the day after President's Rule was lifted.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.