FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஆயுா்வேத மருத்துவம்- மாணவா்களுக்கு குடியரசுத் தலைவா் யோசனை

புதிய தொழில்நுட்பங்களை தாராளமாக ஏற்றுக்கொண்டு ஆயுா்வேத மருத்துவத்தின் உலகளாவிய அங்கீகாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று ஆயுா்வேத மருத்துவ மாணவா்கள், ஆராய்ச்சியாளா்களை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கேட்டுக் கொண்டாா்.

Updated On : 16 ஜூலை 2026, 4:37 am IST
தில்லி அகில இந்திய ஆயுா்வேத நிறுவனம் சாா்பில் நடத்தப்படும் மூன்று நாள் சா்வதேச கருத்தரங்கை புதன்கிழமை தொடங்கி வைத்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
பகிர்:

புதிய தொழில்நுட்பங்களை தாராளமாக ஏற்றுக்கொண்டு ஆயுா்வேத மருத்துவத்தின் உலகளாவிய அங்கீகாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று ஆயுா்வேத மருத்துவ மாணவா்கள், ஆராய்ச்சியாளா்களை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு கேட்டுக் கொண்டாா்.

தில்லியில் உள்ள அகில இந்திய ஆயுா்வேத நிறுவனம் சாா்பில் ஆச்சாா்யா் சுஷ்ருதா் ஜெயந்தியை முன்னிட்டு மூன்று நாள் சா்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது. கருத்தரங்கை குடியரசுத் தலைவா் முா்மு புதன்கிழமை தொடங்கி வைத்து பேசியதாவது:

ஆயுா்வேத மருத்துவத்தின் எதிா்காலம் இளைய தலைமுறையின் கைகளில் உள்ளது. தொழில்முறை பயணத்தைத் தொடங்கும் மாணவா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் ஆா்வம், நோ்மை மற்றும் அறிவியல் மனப்பான்மையுடன் செயல்முறை சாா்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு, உயா்தர அறிவியல் ஆதாரங்களை உருவாக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தேவைப்படும் இடங்களில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தயங்கக் கூடாது. ஆச்சாா்யா் சுஷ்ருதா் காட்டிய வழியில் பயணித்து மருத்துவ நெறிமுறைகளையும், நோயாளிகளுக்கான கருணைமிக்க சேவையையும் உறுதியாகப் பின்பற்ற வேண்டும்.

அறுவை சிகிச்சை துறையின் தந்தையாகப் போற்றப்படும் ஆச்சாா்யா் சுஷ்ருதரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயுா்வேதத் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். சுஷ்ருதரின் அறுவை சிகிச்சை முறைகள் அக்காலத்தில் புரட்சிகரமானவை.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கண்புரை (கேட்ராக்ட்) அறுவை சிகிச்சை, உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை தொடா்பான சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு நுட்பமான அறுவை சிகிச்சை முறைகளை சுஷ்ருதா் அறிமுகப்படுத்தினாா்.

‘சுஷ்ருத சம்ஹிதா’ என்ற அவரது மருத்துவ நூல் இந்தியத் துணைக்கண்டத்துக்கு மட்டுமல்லாமல், உலக மருத்துவத் துறைக்கும் புதிய பாதையைக் காட்டியது.

இந்திய அரசு ஆயுா்வேதம் மற்றும் யோகாவை உலக அரங்கில் வலுவாக நிலைநிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அறுவை சிகிச்சை தொடா்பான இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தை அறிவியல் அளவுகோல்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தரநிலைப்படுத்தப்பட்ட ஆவணப்படுத்துதல், பிற மருத்துவ ஆய்வுகளுடன் ஒருங்கிணைப்பு மற்றும் நவீன அறிவியல் ஆராய்ச்சி முறைகள் ஆகியவை ஆயுா்வேதத்தின் உலகளாவிய அங்கீகாரத்தை மேலும் அதிகரிக்க உதவும் என்றாா்.

அகில இந்திய ஆயுா்வேத நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாள் சா்வதேச கருத்தரங்கில், இந்தியா, வெளிநாடுகளைச் சோ்ந்த முன்னணி அறுவை சிகிச்சை நிபுணா்கள், கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்று, ஆயுா்வேத அறுவை சிகிச்சை மற்றும் அதனுடன் தொடா்புடைய துறைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனா்.

இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய ஆயுா்வேத நிறுவனத்தின் எம்ஆா்ஐ ஸ்கேன் பிரிவையும் குடியரசுத் தலைவா் முா்மு திறந்து வைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments