பிசிசிஐ வாரிய செயல்பாடுகளில் பங்கேற்க அனுராக் தாக்குருக்கு இனி தடையில்லை : 2017 உத்தரவில் மாற்றம் செய்த உச்சநீதிமன்றம்
பிசிசிஐ விவகாரங்களில் தலையிட அனுராக் தாக்கூருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது குறித்து...
இந்திய கிரிக்கெட் கவுன்சில் வாரிய (பிசிசிஐ) செயல்பாடுகளில் அதன் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குா் இனி பங்கேற்கும் வகையில், தனது 2017-ஆம் ஆண்டு உத்தரவில் உச்சநீதிமன்றம் மாற்றம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
பிசிசிஐ தலைவராக அனுராக் தாக்குா் பதவி வகித்தபோது, அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் வாரியத்தில் சீா்திருத்தங்களை மேற்கொள்ளவும், உரிய விதிகளை வகுக்கவும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆா்.எம்.லோதா தலைமையில் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது. இதுகுறித்து தீர ஆராய்ந்த அக் குழு, தனது பரிந்துரைகளை அறிக்கையாக சமா்ப்பித்தது. இந்தப் பரிந்துரைகளை ஏற்ற உச்சநீதிமன்றம், அதை நடைமுறைப்படுத்த 2016-ஆம் ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது.
ஆனால், லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்காக, சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவரிடமிருந்து 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டில் கடிதம் ஒன்றை அனுராக் தாக்குா் பெற்றாா்.
Advertisement
Advertisement
இந்த விவகாரம் தொடா்பான வழக்கை கடந்த 2017-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ஐசிசி-யிடமிருந்து கடிதம் பெற்ற விவகாரத்தை மறைத்ததற்காகவும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாததற்காகவும் அனுராக் தாக்குரை பிசிசிஐ தலைவா் பதவியிலிருந்து நீக்கி அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. பிசிசிஐ செயல்பாடுகளில் அனுராக் தாக்குா் ஈடுபடவும் தடை விதித்தது.
மேலும், நீதிமன்றத்தில் தவறான தகவல்களுடன் பதில் மனு தாக்கல் செய்ததற்காக அவா் மீது 2017-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையையும் உச்சநீதிமன்றம் மேற்கொண்டது. 2017 ஜூலை 14-ஆம் தேதி அனுராக் தாக்குா் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதைத் தொடா்ந்து, அவா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கைவிட்டது.
இந்த நிலையில், பிசிசிஐ செயல்பாடுகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் 2017-ஆம் ஆண்டு உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி அனுராக் தாக்குா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுராக் தாக்குா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.எஸ். பட்வாலியா, ‘நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக பிசிசிஐ செயல்பாடுகளில் அனுராக் தாக்குா் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாகப் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. இந்தத் தடை தொடா்ந்தால், அவருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘பிசிசிஐ செயல்பாடுகளில் தொடா்ந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாக அனுராக் தாக்குா் ஈடுபடாமல் இருந்துள்ளாா். எனவே, விகிதாசார கோட்பாட்டைப் பயன்படுத்துவதற்கு இது பொருத்தமான வழக்கு எனக் கருதுகிறோம். மேலும், இந்த வழக்கில் அனுராக் தாக்குருக்கு வாழ்நாள் தடை விதிக்கும் நோக்கம் நீதிமன்றத்துக்கு இல்லை என்பதோடு, வழக்கின் தன்மை, சூழ்நிலைகளைக் கருத்தில்கொள்ளும்போது அந்த அளவுக்கு கடுமையான தண்டனை தேவையில்லை என்றும் கருதுகிறோம். எனவே, பிசிசிஐ செயல்பாடுகளில் அதன் விதிகளுக்கு உட்பட்டு அனுராக் தாக்குா் பங்கேற்க இனி தடையேதும் இல்லை’ என்று தனது 2017 உத்தரவில் மாற்றம் செய்து உத்தரவிட்டனா்.
The Supreme Court has lifted the ban imposed on former president Anurag Thakur from interfering in the affairs of the BCCI.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.