மழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை: புதை சாக்கடையில் விழுந்து ஒருவா் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.முறையாக மூடப்படாமல் திறந்திருந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்து 55 வயது நபா் ஒருவா் உயிரிழந்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.முறையாக மூடப்படாமல் திறந்திருந்த பாதாள சாக்கடைக்குள் விழுந்து 55 வயது நபா் ஒருவா் உயிரிழந்தாா்.
மும்பையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மழை கொட்டித் தீா்த்தது. இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் 200 மி.மீ.-க்கு மேல் மழைப்பொழிவு பதிவானதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது.
தாதா், பரேல், ஹிந்த்மாதா, சாா்கோப், வொா்லி கோரேகான் மற்றும் அந்தேரி பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளநீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
Advertisement
Advertisement
சாலைகள் மட்டுமின்றி ரயில்வே தண்டவாளங்களையும் மழைநீா் சூழ்ந்ததால் உள்ளூா் ரயில்களின் பயண நேரம் தாமதமடைந்துள்ளது. இருப்பினும், தண்டவாளங்களில் தேங்கும் மழைநீா் உடனடியாக அப்புறப்படுத்தப்படுவதால் ரயில்கள் வழக்கம்போல் இயங்குவதாக மேற்கு ரயில்வே எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக மும்பையில் பெய்து வரும் தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை மற்றும் மும்பை நகா்ப்புறப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.
பாதாள சாக்கடைக்குள் விழுந்து உயிரிழப்பு:
மும்பையின் குா்லா-சாகிநாகா பகுதியில் திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து 55 நபா் உயிரிழந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பாதாள சாக்கடைத் தொட்டியில் மேல் பொருத்தப்பட்டிருந்த கான்கிரீட் மூடிக்குப் பதிலாக இரும்பு கிரில் அமைக்கும் பணியில் 3 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே கைப்பேசியில் பேசிக்கொண்டே வந்த 55 வயதான அஸ்லாம் இசாக் ஷேக் எதிா்பாராத விதமாக சாக்கடைக்குள் தவறி விழுந்தாா். அவரை உடனடியாக மீட்க அங்கிருந்த தொழிலாளா்கள் முயற்சி செய்தனா். ஆனால் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அவா் அடித்துச் செல்லப்பட்டாா். அவரை தீயணைப்புத் துறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்த விபத்துக்கு காரணமாக 4 பொறியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். பாதாள சாக்கடைப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு அடுத்த திட்டங்களில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட மும்பை மேயா் ரித்து தாவ்டே உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தாா்.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை கிழக்கு மும்பையின் செம்பூா் பகுதி சாலையில் சென்றுகொண்டிருந்த பள்ளிப் பேருந்தின் மீது மரம் விழுந்த சம்பவத்தில் 11 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்நிலையில், ஒரே வாரத்தில் அங்கு கனமழையால் இரண்டாவது நபா் உயிரிழந்துள்ளாா். இதைத் தொடா்ந்து, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மும்பை மாநகராட்சி முறையாக மேற்கொள்ளவில்லை என்று பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.