ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனையம்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
ஜோத்பூர் விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டது தொடர்பாக..
ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் உதான் திட்டத்தையும் தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஜோத்பூர் வந்தடைந்த பிரதமரை, ஆளுநர் ஹரிபாவ் பாகடே, மத்திய அமைச்சரும் ஜோத்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பிரதமர் மோடி ரிமோட் மூலம் புதிய முனையத்தின் திறப்பு விழாப் பலகையைத் திறந்துவைத்தார். அதன்பின்னர், புதிய முனையக் கட்டடத்தையும் பார்வையிட்டார்.
Advertisement
Advertisement
ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடம் மொத்தம் ரூ. 480 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 23,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இம்முனையம், ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் வரை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தடையற்ற மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் வகையில், நவீன பயணிகள் வசதிகளுடன் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், விமானப் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரிவான மற்றும் நிலையான விமானப் போக்குவரத்து இணைப்பை உறுதி செய்வதற்காக, இத்திட்டம் பல்வேறு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.
பிரதமர் புதிய முனையத்தைப் பார்வையிட்டபோது, நாட்டுப்புறக் கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த முனையம் மாநிலத்தின் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும், விமான இணைப்பை மேம்படுத்தும், சுற்றுலாவை ஊக்குவிக்கும், வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இந்நிகழ்ச்சியில் உதான் திட்டத்தின் சாதனைகள், முன்னேற்றங்களும் எடுத்துரைக்கப்பட்டன. இந்த நவீன முனையத்தின் திறப்பு விழா பயணிகளுக்குச் சிறந்த சேவைகளை உறுதி செய்வதோடு, ஜோத்பூருக்கான விமான இணைப்பையும் கணிசமாக வலுப்படுத்தும். இத்திட்டம் மாநிலத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, பார்மர் மாவட்டம் பச்பத்ராவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மேலும், ராஜஸ்தானின் பலோத்ராவில் ரூ. 1.06 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்தார். இந்த திட்டங்கள் நகர்ப்புற போக்குவரத்து, ரயில்வே உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கியுள்ளன.
நாட்டின் எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் ஒரு மைல்கல் சாதனையாக அமையும் வகையில், பலோத்ராவில் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ. 13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான செலவில் அமையவுள்ள ஜெய்ப்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
Prime Minister Narendra Modi on Saturday inaugurated the new terminal building at Jodhpur airport and launched the modified UDAN Scheme.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.