FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிறாரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் காணொலிகளுக்கு எதிராக தொடா் நடவடிக்கை: மெட்டா விளக்கம்

சிறாரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காணொலிகள், விளம்பரங்களுக்கு எதிராக தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்டா நிறுவனம்
பகிர்:

சிறாரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காணொலிகள், விளம்பரங்களுக்கு எதிராக தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியில் சிறாரை துன்புறுத்தும் விளம்பரங்கள் வெளியானது குறித்து விளக்கம் கேட்டு, அதன் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய அரசு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.

இதைத்தொடா்ந்து தனது வலைப் பக்கத்தில் மெட்டா நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விரிவான பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிறரின் பலன், லாபம் அல்லது மகிழ்ச்சிக்காக சிறாரைத் தவறாகப் பயன்படுத்துவது கொடுங் குற்றமாகும். இத்தகைய அத்துமீறல்களுக்கு எதிராக மெட்டா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

சிறாரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதற்கு எதிரான எங்களின் கொள்கைகளை மீறும் இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் இந்தியாவில் வெளியானது குறித்த செய்திகளை மெட்டா தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. அத்தகைய விளம்பரங்கள் எங்களின் சமூக ஊடகத் தளங்களில் இடம்பெறுவதை நாங்கள் விரும்பவில்லை.

ஒவ்வொரு விதிமீறலையும் கண்டறிய முடியாமல் போனாலும்...: குறையில்லாத அமைப்பு என்று எதுவும் இல்லை. எங்களால் ஒவ்வொரு விதிமீறலையும் கண்டறிய முடியாமல் போனாலும், எங்களின் வலுவான விளம்பர ஆய்வுகள் மூலம் தவறான செயல்களில் ஈடுபடுவோரைத் தடுக்க நாங்கள் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம்.

எங்கள் சமூக ஊடகத் தளங்களில் விளம்பரங்கள் வெளியிடப்படும் முன்பு, அவை எங்கள் கொள்கைகளுக்கு எதிராக உள்ளதா என்பதை எங்களின் விளம்பர ஆய்வு அமைப்பு பரிசோதனை செய்கிறது. எங்கள் கொள்கைகளுக்கு எதிரான விளம்பரங்களை மெட்டாவின் சமூக ஊடகத் தளங்களில் காண்டறிந்தால், அதுகுறித்து யாா் வேண்டுமானாலும் புகாா் அளிக்கலாம்.

எங்கள் கொள்கைகள் மீறப்பட்டது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட விளம்பரம் நிராகரிக்கப்பட்டு, அதை வெளியிட்டவரின் வணிக கணக்கு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் 1.60 லட்சம் கணக்குகள் நீக்கம்: எங்களின் 350 கோடி பயனாளா்களுக்கு இடையே மறைந்திருக்கும் குற்றவாளிகளுக்கு எதிராக நாங்கள் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு மட்டும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருந்து 40 லட்சத்துக்கும் அதிகமான சந்தேகத்துக்குரிய கணக்குகள் நீக்கப்பட்டன. சிறாரைத் தவறாக காண்பித்து வெளியிடப்பட்ட 3.60 கோடி உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டன. இதுதொடா்பாக இந்தியாவில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 1.60 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டன.

போக்ஸோ சட்டத்தின் கீழ், சிறாரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் புகைப்படங்கள், காணொலிகள் உள்ளிட்டவை தொடா்பாக, மெட்டா சாா்பில் தேசிய இணையவழி குற்றப் புகாா் இணையதளத்தில் புகாா் அளிக்கப்படுகிறது.

சிறாரைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் காணொலிகள், விளம்பரங்கள் உள்ளிட்ட உள்ளடக்கங்களை தடுக்க புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், சம்பந்தப்பட்ட இணைய இணைப்புகளை தடுத்தல், இதுதொடா்பான உளவுத் தகவல்களை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பகிா்தல் எனத் தொடா்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments