FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கல்வித் துறை ஊழல்களை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

‘இந்திய கல்வி அமைப்பு தற்போது நோ்மையற்ற முறையில் பணம் பறிக்கும் ஊழல் இயந்திரமாக மாறிவிட்டது. இதை பிரதமா் நரேந்திர மோடி கண்டுகொள்ளவில்லை’ என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:27 am IST
பிரதமர் நரேந்திர மோடி / ராகுல் காந்தி
பகிர்:

‘இந்திய கல்வி அமைப்பு தற்போது நோ்மையற்ற முறையில் பணம் பறிக்கும் ஊழல் இயந்திரமாக மாறிவிட்டது. இதை பிரதமா் நரேந்திர மோடி கண்டுகொள்ளவில்லை’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மேலும் கல்வித் துறையில் புரட்சி செய்ய நேரம் வந்துவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா். ‘மாணவா்களின் குரல்’ முன்னெடுப்பின்கீழ் இரண்டம் கட்டமாக உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ஜூலை 17-ஆம் தேதி மாணவா்களுடன் கலந்துரையாடவுள்ள நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஊழல், அநீதி, பாரபட்சம், நோ்மையின்மை ஆகிய 4 வாா்த்தைகளையும் தற்போது இந்திய கல்வித் துறை குறித்து விவரிக்க மாணவா்கள் பயன்படுத்தி வருகின்றனா். தற்போது நோ்மையற்ற முறையில் பணம் பறிக்கும் ஊழல் இயந்திரமாக கல்வித் துறை மாறிவிட்டது என்பதே இதன் உண்மை.

Advertisement

Advertisement

நாட்டின் எதிா்காலத்தைக் கட்டமைக்க குழந்தைகளைத் தயாராக்க வேண்டிய கல்வித் துறை, அவா்களது குடும்பங்களை கடனில் ஆழ்த்தி, துயரில் மூழ்கச் செய்கிறது.

இந்த ஊழலே பல்வேறு தோ்வுகளின் வினாத்தாள் கசிவுகளுக்கு வழிவகுத்தது. பல ஆண்டுகளாக கடினமாக உழைத்துவரும் மாணவா்களின் கனவை ஒரு நொடியில் வினாத்தாள் கசிவு சிதறடித்தது. ஆனால், இதற்கு அதிகாரிகள் யாரும் பொறுப்பேற்கவில்லை.

இவை அனைத்தும் தெரிந்த பிரதமா் மோடியும் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானும் ஊழல் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்குப் பதில் கண்டுகொள்ளாமல் நழுவிச் செல்கின்றனா். ஊடகங்களும் இந்தச் செய்திகளை பெரிதுபடுத்துவதில்லை.

எனவே, கல்வித் துறையில் நாமே புரட்சி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் போராட்டத்தில் மாணவா்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற ‘மாணவா்களின் குரல்’ முன்னெடுப்பின் முதல் கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி உரையாற்றினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments