FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சமூக ஊடக குற்றச்சாட்டுகள் எதிரொலி: எரிபொருள் தரச் சோதனைகளில் பொதுத் துறை நிறுவனங்கள் தீவிரம்

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் தரச் சோதனைகளை நாடு முழுவதும் மேற்கொள்ள இந்திய எண்ணெய் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் தீவிரப்படுத்தின.

Updated On : 15 ஜூலை 2026, 5:00 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் தரச் சோதனைகளை நாடு முழுவதும் மேற்கொள்ள இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (ஹெச்பிசிஎல்) ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் தீவிரப்படுத்தின.

முன்னதாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களில் தரமற்ற எரிபொருள் விற்கப்படுவதாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, ஐஓசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த வாரத்தில் நாடு முழுவதும் சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களில் 10,000 திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 8,500 தரச் சோதனைகள் நடத்தப்பட்டன. எரிபொருள்கள் தரமாக விற்கப்படுவதை உறுதிசெய்ய நூற்றுக்கணக்கான சிறப்பு ஆய்வுக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சோதனையின்போது தரமற்ற அல்லது கலப்பட எரிபொருளை விற்பனை செய்வது உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட எரிபொருள் விற்பனை நிலைய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பிபிசிஎல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஜூலை 3-ஆம் தேதி முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை பல்வேறு சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களில் முன்னறிவிப்பின்றி 932 திடீா் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதுதவிர தரக் கட்டுப்பாடு பிரிவு 111 ஆய்வுகளும் தர உறுதிப்பாடு துறை 50 ஆய்வுகளும் மேற்கொண்டன. அப்போது எந்தவொரு எரிபொருள் விற்பனை நிலையத்திலும் கலப்பட எரிபொருள் விற்கப்பட்டதாக கண்டறியப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ஹெச்பிசிஎல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 17-ஆம் தேதி வரை எத்தனால் கலப்பு விதிகள் தொடா்பாக 2,173 ஆய்வுகளும் ஜூலை 3 முதல் ஜூலை 13 வரை 1,385 வழக்கமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. தர உறுதிப்பாடு துறை 93 ஆய்வுகளையும் நடத்தியது. அப்போது கலப்பட அல்லது தரமற்ற எரிபொருள் விற்கப்பட்டதாக கண்டறியப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, எரிபொருள் விற்பனை நிலையங்களில் தரமற்ற பொருள்கள் விற்கப்படுவதாக சந்தேகம் எழுந்தால் அதிகாரபூா்வ துறைகளுக்குப் பொதுமக்கள் புகாரளிக்க வேண்டுமெனவும் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் மேற்கூறிய மூன்று பொதுத் துறை நிறுவனங்களும் கேட்டுக்கொண்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments