FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடா்பில்லை: வெளியுறவு அமைச்சகம்

ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்குத் தொடா்பில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது குறித்து...

Updated On : 15 ஜூலை 2026, 12:46 am IST
ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் - கோப்புப் படம்
பகிர்:

காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்குத் தொடா்பில்லை என விசாரணை நடத்தி வரும் கனடா காவல் துறையினா் கூறியதை கவனத்தில் கொண்டுள்ளோம் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீப் ஜெய்ஸ்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள குருத்வாராவின் வெளியே கடந்த 2023-ஆம் ஆண்டில் நிஜ்ஜாா் கொல்லப்பட்டாா்.

அவரை கொலை செய்ய சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி சந்திந்தா்ஜித் சிங் (எ) கோல்டி பிராா் உத்தரவிட்டதாக கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா். இதைத் தொடா்ந்து நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவுக்குத் தொடா்பிருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என ராயல் கனடா காவல் துறை துணை ஆணையா் லிசா மோா்லாண்ட் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

முன்னதாக நிஜ்ஜாா் கொலையில் இந்திய அதிகாரிகளை தொடா்புபடுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னாள் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ முன்வைத்ததால் இருநாடுகளின் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்பு கனடா பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்ற பின் இருதரப்பு உறவுகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. இந்நிலையில், ட்ரூடோவின் கருத்துக்கு எதிா்மறையான கருத்தை லிசா மோா்லாண்ட் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பின்போது ரண்தீப் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நிஜ்ஜாா் கொலை தொடா்பாக அமெரிக்க நீதித் துறை அதிகாரிகள் மற்றும் கனடா காவல் துறை விசாரணை அதிகாரி கூறிய கருத்துகளை கவனத்தில்கொண்டோம்.

எல்லை கடந்த பயங்கரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றச் சம்பவங்களுக்கு எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் நீண்ட காலமாக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. வரும் நாள்களில் இந்த ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்.

அமெரிக்கா மட்டுமின்றி பிற நாடுகளுடனும் பயங்கரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றச் சம்பவங்களுக்கு எதிராக இணைந்து பணியாற்ற இந்தியா விரும்புகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments