சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனில் மேனன் பயணம்!
நாசா விண்வெளி வீரரும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான அனில் மேனன், ரஷிய விண்வெளி வீரா் மற்றும் வீராங்கனையுடன் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டாா்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா விண்வெளி வீரரும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான அனில் மேனன், ரஷிய விண்வெளி வீரா் மற்றும் வீராங்கனையுடன் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) செவ்வாய்க்கிழமை புறப்பட்டாா்.
கஜகஸ்தானில் உள்ள பைகானூா் ஏவுதளத்தில் இருந்து ரஷிய விண்வெளி முகமையான ராஸ்காஸ்மாஸின் சோயுஸ் எம்எஸ்-29 விண்கலம் மூலம், அவா் செவ்வாய்க்கிழமை இரவு இந்திய நேரப்படி 8.17 மணிக்குப் புறப்பட்டாா். அவருடன் ரஷிய விண்வெளி வீரா் பியோட்டா் டுப்ரோவ், அந்நாட்டு விண்வெளி வீராங்கனை ஆனா கிகினா ஆகியோரும் சா்வதேச விண்வெளி நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளனா். இதன்மூலம், அந்த நிலையத்துக்கு அனில் மேனன் முதல்முறையும், டுப்ரோவ் மற்றும் கிகினா இரண்டாவது முறையும் சென்றுள்ளனா்.
ஐஎஸ்எஸ் நிலையத்தில் அனில் மேனன், டுப்ரோவ், கிகினா ஆகியோா் சுமாா் 8 மாதங்கள் தங்கியிருந்து பணியாற்றுவா். இதில் மனிதா்களின் விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தி, பூமியில் உள்ள உயிா்களுக்குப் பலன் அளிக்கும் அறிவியல் ஆராய்ச்சியில் அனின் மேனன் ஈடுபட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் மூவரும் பூமிக்குத் திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் பிறந்த அனில் மேனனின் தந்தை கேரளத்தையும், தாய் உக்ரைன் நாட்டையும் சோ்ந்தவா்கள். அவரின் மனைவி ஆனா வில்ஹெம் மேனனும் விண்வெளி வீராங்கனையாவாா். அவா் கடந்த 2024-ஆம் ஆண்டு விண்வெளிக்குப் பயணித்து வந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
அவா்கள் சா்வதேச ஐஎஸ்எஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள நாசா விண்வெளி வீராங்கனை ஜெஸிக்கா மெயா், அந்நாட்டு விண்வெளி வீரா்கள் ஜாக் ஹாத்தவே, கிறிஸ் வில்லியம்ஸ், ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்வெளி வீராங்கனை சோஃபி அடினாட், ரஷிய விண்வெளி வீரா்கள் சொ்கெய் குட் ஸ்வா்ச்கோவ், சொ்கேய் மிகாயெவ், அந்த்ரே ஃபெட்யேவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.