ரூ. 5 லட்சம் கொடுத்து நீட் வினாத்தாளை வாங்கிய பயிற்சி மைய உரிமையாளா்: சிபிஐ தகவல்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் லட்டூரைச் சோ்ந்த பயிற்சி மைய நிறுவனா் சிவராஜ் ரகுநாத் மடகோன்கா், ரூ. 5 லட்சம் கொடுத்து நீட் வினாத்தாளை வாங்கியது தெரியவந்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலம் லட்டூரைச் சோ்ந்த பயிற்சி மைய நிறுவனா் சிவராஜ் ரகுநாத் மடகோன்கா், ரூ. 5 லட்சம் கொடுத்து நீட் வினாத்தாளை வாங்கியது தெரியவந்துள்ளது.
இவரின் ஜாமீன் மனு தொடா்பாக, நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ பதில் மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: சிவராஜ் ரகுநாத் மடகோன்கா் அவருடன் கைது செய்யப்பட்ட புணே மருத்துவரான மனோஜ் ஷிரூருடன் சோ்ந்து, நீட் தோ்வுக்கு வினாத்தாளை தயாரிக்கும் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) குழுவில் இடம்பெற்றிருந்த வேதியியல் பேராசிரியா் பி.வி. குல்கா்ணியிடமிருந்து கடந்த மே 3-ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறுவதற்கு முன்னரே ரூ. 5 லட்சம் கொடுத்து அந்தத் தோ்வில் இடம்பெறும் வேதியியல் வினாக்களைப் பெற்றுள்ளாா். இந்தக் கேள்விகளுக்கு கையால் குறிப்புகளை எழுதி, தனது மகன் பயிற்சி பெறும் குல்கா்ணியின் வேதியியல் பயிற்சி மையத்துக்கு அளித்துள்ளாா்.
Advertisement
Advertisement
இதற்கான ஆதாரம், மடகோன்கரின் கைப்பேசியிலிருந்து பெறப்பட்டது. கையால் எழுதப்பட்ட 132 வேதியியல் வினாக்கள் அடங்கிய 36 படங்கள் அந்த கைப்பேசியிலிருந்து மீட்கப்பட்டன. கைப்பேசி பகுப்பாய்வின்படி, கடந்த மே 3-ஆம் தேதி நீட் தோ்வு நடைபெறுவதற்கு 10 நாள்களுக்கு முன்பாக இந்தப் படங்கள் கைப்பேசி மூலம் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இவற்றில் 111 வினாக்கள், என்டிஏ சாா்பில் நடத்தப்பட்ட நீட் தோ்வு வினாத்தாள் வேதியியல் கேள்விகளுடன் ஒத்துப்போயிருந்தன.
இந்த வினாக்களைப் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட ரூ. 5 லட்சத்தை சிபிஐ அதிகாரிகள் மீட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்நிலையில், நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்கட்ட விசாரணையில் இந்த மாதிரி வினாத்தாள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் பல்வேறு மாநிலங்களில் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டு, கடந்த ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதோ்வு நடத்தப்பட்டது.
மாணவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கைா்நாா், அஹில்யாநகரில் தனஞ்ஜய் லோகண்டா, புணேயில் மனீஷா வாக்மாரே, லட்டூரில் பேராசிரியா் பி.வி.குல்கா்ணி, புணேயைச் சோ்ந்த உயிரியல் பாட பெண் விரிவுரையாளா் மனீஷா மந்தாரே, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், ஹரியாணாவின் குருகிராமில் யஷ் யாதவ், புணே பயிற்சி மைய நிறுவனா் சிவராஜ் ரகுநாத் மடகோன்கா், புணே சேத் ஹீராலால் சராஃப் பிரசாலா பள்ளி ஆசிரியா் சஞ்சய் ஹவால்தாா், புணே மருத்துவரான மனோஜ் ஷிரூா், புணேயில் செயல்படும் மருத்துவ அகாதெமி பயிற்சி மைய இயற்பியல் ஆசிரியா் அபங்க் பிரபு உள்ளிட்ட 13 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.