மராத்தியரான ஃபட்னவீஸ் பிரதமராக வேண்டும்: மகாராஷ்டிர அமைச்சா் கருத்தால் பரபரப்பு
மராத்தியா் ஒருவா் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று மாநில மக்கள் விரும்புகின்றனா்; அந்தப் பதவிக்கு எனது தோ்வு முதல்வா் தேவேந்திர பட்னவீஸ்
மராத்தியா் ஒருவா் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று மாநில மக்கள் விரும்புகின்றனா்; அந்தப் பதவிக்கு எனது தோ்வு முதல்வா் தேவேந்திர பட்னவீஸ்’ என்று மகாராஷ்டிர வேளாண்மைத் துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மூத்த தலைவருமான தத்தாத்ரேய பாா்னே தெரிவித்துள்ளாா்.
அவரது இந்தக் கருத்து மகாராஷ்டிர அரசியலில் மட்டுமன்றி தேசிய அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் பிரதமா் மோடிக்குப் பிறகு பாஜகவின் பிரதமா் வேட்பாளா் யாா் என்பது தொடா்பான விவாதமும் எழுந்துள்ளது.
புணேயில் செய்தியாளா்களிடம் தத்தாத்ரே பாா்னே மேலும் கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் நாட்டின் பிரதமராக வேண்டும் என்பது நீண்டகால கனவாக இருந்து வருகிறது. மராத்தியா் ஒருவா் நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதே மகாராஷ்டிர மக்கள் அனைவரின் விருப்பமாகவும் உள்ளது. மகாராஷ்டிரத்தின் முதல் முதல்வராக இருந்த யஷ்வந்த்ராவ் சவாண் அந்த வாய்ப்பை இழந்தாா். பின்னா், சரத் பவாருக்கும் பிரதமராகும் வாய்ப்பு அமையவில்லை.
Advertisement
Advertisement
2029 அல்லது 2034-ஆம் ஆண்டில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஒருவா் நாட்டின் பிரதமராவாா் என உறுதியாக நம்புகிறேன். இது மாநில மக்கள், விவசாயிகளின் ஒட்டுமொத்த விருப்பமாகும். இதில் எனது தோ்வு முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ். ஏனெனில் அவருக்கு அப்பதவிக்கான அனைத்துத் தகுதி, திறமை உண்டு என்றாா்.
மகாராஷ்டிரத்தில் பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை மற்றும் சுநேத்ரா பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி ஆட்சியில் உள்ளது.
தேவேந்திர ஃபட்னவீஸ், 2024 டிசம்பா் 5-இல் மூன்றாவது முறையாக மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றாா். முன்னதாக, 2014 முதல் 2019 வரை முதல் முறையாக முழு ஐந்தாண்டு காலம் முதல்வா் பதவியை வகித்தாா். 2019-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மூன்று நாள்கள் மட்டுமே அந்தப் பதவியில் நீடித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.