சிஜேபி போராட்டத்தில் தேசியக் கொடியை அவமதித்த காவலர்!
நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஏந்திச் சென்ற தேசியக் கொடியை காவலர் ஒருவர் அவமதித்தது குறித்து...
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் இளைஞர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், தேசியக் கொடியை அவமதித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தேசியக் கொடியை முகம் துடைத்து கீழே வீசி, பூட்ஸ் காலால் உதறிவிடும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. போராட்டத்தை படம்பிடித்துக்கொண்டிருந்த பத்திரிகையாளரின் விடியோவில் இந்தக் காட்சி பதிவாகியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீட் மோசடியைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தர் திடலில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சோனம் வாங்சுக் திட்டமிட்டிருந்தபடி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், போராட்டம் நடைபெற்றுவந்த ஜந்தர் மந்தரில் இருந்து அமைதியான முறையில் பேரணி தொடங்கியது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்ற நிலையில், பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் பேரணியில் ஈடுபட்டவர்களை அரசு தடுத்து நிறுத்தியது.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி முழுவதும் 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதால், சிஜேபி போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். பேரணியாக வருவோரைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் ஆயுதம் ஏந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர் பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. நாடாளுமன்ற சாலையில் நுழைந்த இளைஞர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். தடுப்புகளை அமைத்து அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.
இதுமட்டுமின்றி பேரணியாக அந்தப் பகுதியில் நுழைந்தவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். எனினும் பத்திரிகையாளர்கள் உள்பட போராட்டக்களத்தை பலரும் விடியோ பதிவு செய்தனர்
இச்சம்பவத்தின்போது காவலர் ஒருவர் போராட்டக்காரர்கள் கையில் ஏந்திவந்த தேசியக் கொடியை அவமதிக்கும்வகையில் நடந்துகொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அந்த விடியோவில், காவலர் ஒருவர் கொடியால் முகம் துடைத்து கீழே வீசி காலணி அணிந்த காலால் அதை உதைத்துத் தள்ளுகிறார். விடியோ எடுத்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர் கொடியை குனிந்து கையால் எடுத்துக்கொண்டு அவரை நோக்கி விடியோ பதிவு செய்துகொண்டே ஓடுகிறார். ஆனால், அவர் காவல் துறையின் கூட்டத்தில் சென்று மறைகிறார். இந்த விடியோவுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Cockroach Janata Party rally Delhi Police insults the Tricolour
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.