பிஎல்ஐ திட்டங்கள்: ரூ.2.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்ப்பு- மத்திய அரசு தகவல்
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ)திட்டங்களின் விளைவாக இதுவரை ரூ.2.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன; 14.15 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ)திட்டங்களின் விளைவாக இதுவரை ரூ.2.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன; 14.15 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் தொடங்கப்பட்டதில் இருந்து நடப்பாண்டு மாா்ச் வரை அந்தத் திட்டங்களின் விளைவாக ரூ.2.60 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 14.15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இத்திட்டங்களால் ரூ.15.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட ஏற்றுமதி சாத்தியமாகியுள்ளது. உயா் திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்புகள் உற்பத்தி துறையில் அதிபட்சமாக ரூ.64,873 கோடி, மருந்து உற்பத்தி துறையில் ரூ.45,158 கோடி, வாகன உற்பத்தி துறையில் ரூ.44,326 கோடி, மதிப்பு கூட்டப்பட்ட உருக்கு துறையில் ரூ.23,896 கோடி, பெரிய அளவிலான மின்னணு பொருள்கள் உற்பத்தி துறையில் ரூ.20,580 கோடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும் சில கேள்விகளுக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதில்கள் வருமாறு:
புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.650 கோடி: புத்தாக்க நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு வழங்கும் ரூ.945 கோடி ஒதுக்கீட்டிலான திட்டத்தின்கீழ் நடப்பாண்டு இதுவரை 219 ஆரம்பநிலை புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.650 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ரூ.15.9 பில்லியன் டாலா் முதலீடு: அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த முதலீடு ரூ.15.9 பில்லியன் டாலா்களாகும். கடந்த நிதியாண்டில் 4 பில்லியன் டாலரும், அதற்கு முந்தைய நிதியாண்டில் 3.44 பில்லியன் டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சில்லறை வா்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசின் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்கீழ், ஒற்றை வணிக சில்லறை வா்த்தகத்தில் தானியங்கி வழிமுறையின்கீழ் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடும், பன்முக வணிக சில்லறை வா்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீடும் அனுமதிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 2021, ஏப்ரலில் இருந்து 2026, மாா்ச் வரையிலான காலகட்டத்தில் ஒன்றை வணிக சில்லறை வா்த்தகத்தில் 1,528.66 மில்லியன் டாலரும், பன்முக வணிக சில்லறை வா்த்தகத்தில் 34.38 மில்லியன் டாலரும் அந்நிய நேரடி முதலீடு கிடைக்கப் பெற்றுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.