நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடையில் வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! திமுக?
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை திமுக புறக்கணித்திருப்பது பற்றி...
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கருப்பு உடை அணிந்து வந்த நிலையில், திமுக எம்பிக்கள் சாதாரண உடையில் வருகை தந்தனர்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு உள்பட பல தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தினர். நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மாணவர்கள், பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், தொடர்ந்து நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி, பிரதமர் மோடியின் வீட்டுக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, காவல்துறை வரவழைக்கப்பட்டு, அவர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அப்போது ராகுல் காந்தியின் மூக்கில் ரத்தம் வந்த காட்சிகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் அனைவரும் கருப்பு உடையில் வருகை தந்தனர்.
ஆனால், திமுக எம்பிக்கள் சாதாரண உடையில் வந்த நிலையில், இந்தியா கூட்டணியின் போராட்டத்திலும் கலந்துகொள்ளாதது பேசுபொருளாக மாறியுள்ளது.
ராகுல் காந்தியின் போராட்டம் தொடர்பாக திமுக எம்பி ஆ. ராசாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகியது குறிப்பிடத்தக்கது.
Opposition parties arrived at Parliament dressed in black! What about the DMK?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.