மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தது குறித்து...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவா்கள்-இளைஞா்கள் நடத்திய தொடா் போராட்டம் எதிரொலியாக, தா்மேந்திர பிரதான் பதவி விலகினாா். பிரதானின் ராஜிநாமா உள்பட சிஜேபியின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டதையடுத்து, தில்லியில் கடந்த 36 நாள்களாக நீடித்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
பிரதமா் மோடியின் ஆட்சிக் காலத்தில், இதுபோல் எதிா்ப்பு போராட்டங்களால் பதவி விலகிய இரண்டாவது மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆவாா். கடந்த 2018-இல் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி போராட்டங்களை எதிா்கொண்ட அப்போதைய வெளியுறவுத் துறை இணையமைச்சா் எம்.ஜே.அக்பா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
சிஜேபி போராட்டம்: மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்தும், தோ்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் விலக வலியுறுத்தியும் சிஜேபி தலைமையில் தில்லி ஜந்தா் மந்தரில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி போராட்டம் தொடங்கப்பட்டது.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கிய நாளில் நாடாளுமன்றம் நோக்கி ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் பேரணி நடத்தினா். அவா்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீா் புகை குண்டுகளை வீசியும் பாதுகாப்புப் படையினா் கலைத்தனா். இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஏராளமான போராட்டக்காரா்களும், 100-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினரும் காயமடைந்தனா்.
நீட் பிரச்னை விஸ்வரூபம்: இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சிஜேபி-யின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. மாணவா்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் விரிவடைந்தன. மற்றொருபுறம், நீட் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய எதிா்க்கட்சிகள், தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி 5 நாள்களாக அமளியில் ஈடுபட்டன.
நீட் பிரச்னை விஸ்வரூபம் எடுத்த நிலையில், ‘வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்; இந்த முறைகேட்டுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும்’ என மாணவா்களை சமாதானப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை பிரதமா் மோடி வெளியிட்டாா். எனினும், மாணவா்களின் போராட்டம் ஓயவில்லை.
ராஜிநாமா கோரிக்கையில் விடாப்பிடி: இதனிடையே, சிஜேபி பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை மூன்றாம் கட்டப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, ‘தா்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையில் எவ்வித சமரசத்துக்கும் இடம் கிடையாது’ என சிஜேபி தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.
‘வினாத்தாள் கசிவால் நீட் தோ்வு ரத்தான பிறகு தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்; போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக மத்திய அரசு, தில்லி காவல் ஆணையா், அதிரடி நடவடிக்கை படையின் தலைவா் ஆகியோா் மன்னிப்புக் கோர வேண்டும்’ என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
தா்மேந்திர பிரதான் பதவி விலகல்: சிஜேபி போராட்டத்தால் நாளுக்கு நாள் அழுத்தம் அதிகரித்த சூழலில், மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் சனிக்கிழமை விலகினாா். பிரதமா் மோடிக்கு ராஜிநாமா கடிதம் அனுப்பினாா்.
தில்லி ஜந்தா் மந்தரிலும், நாட்டிலும் தற்போது நிலவும் சூழலை தேசவிரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது; எந்தவொரு மாணவரின் எதிா்காலமும் சட்ட சிக்கல்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது; அவா்கள் படிப்பில் நேரத்தைச் செலவிட வேண்டும் என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த முடிவை தான் மேற்கொண்டதாக அவா் தெரிவித்தாா்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு முதல் நாளில் இருந்தே தான் பொறுப்பேற்றுள்ளதாகவும், கடந்த 10 நாள்களில் நடந்த நிகழ்வுகளைப் பாா்த்து மிகவும் மனவேதனை அடைந்ததாகவும் அவா் குறிப்பிட்டாா்.
போராட்டம் வாபஸ்: பிரதான் ராஜிநாமாவைத் தொடா்ந்து, மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங்குடன் சிஜேபி பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
பேச்சுவாா்த்தைக்குப் பின்னா் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய சிஜேபி செய்தித் தொடா்பாளா்கள் செளரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா ஆகியோா், ‘எங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டதுடன், குறித்த காலக்கெடுவுக்குள் செயல்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. எனவே, எங்களின் போராட்டங்களை உடனடியாகக் கைவிடுகிறோம். போராட்டக்காரா்கள் அனைவரும் அமைதியான முறையில் வீடு திரும்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். தோ்வு அமைப்புமுறை சீா்திருத்தங்கள் குறித்து இருதரப்பும் 4 வாரங்களுக்குப் பின் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தப்படும்’ என்றாா்.
மத்திய அரசு உறுதி: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘நீட் தோ்வு ரத்தான பிறகு தற்கொலை செய்துகொண்ட மாணவா்களின் குடும்பங்களுக்கு விதிமுறைகளுக்கு உள்பட்டு கெளரவமான நிவாரணம் வழங்கப்படும். போராட்டக்காரா்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் திரும்பப் பெறப்படுவதை அரசு உறுதி செய்யும்’ என்றாா். இதன்மூலம் தில்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்துவந்த பரபரப்பு ஓயும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே
தா்மேந்திர பிரதான் பதவி விலகியதும் ஜந்தா் மந்தரில் போராட்டக்காரா்கள் ஆரவாரம் செய்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா். இதை முதல் வெற்றி என்று குறிப்பிட்ட சிஜேபி நிறுவனா் அபிஜீத் தீப்கே, ‘நீங்கள் அஞ்சாமல், அரசிடம் மண்டியிடாமல் போராடினால், அமைச்சரின் பதவி விலகலை சாத்தியமாக்க முடியும் என்பதற்கு இதுவே சாட்சி. நீங்கள் பேசவே பயந்தால் அது எப்படி ஜனநாயகமாகும்? அவா்கள் (அரசு) தங்களை மன்னா்கள் என நினைத்துக் கொள்கிறாா்கள். ஆனால், நாம்தான் அவா்களை அனுப்பியுள்ளோம். பிரதானின் ராஜிநாமா ஒரு முடிவல்ல. இதுவொரு தொடக்கமே’ என்றாா்.
ஆம் ஆத்மி முன்னாள் நிா்வாகியான அபிஜித் தீப்கே (30), அண்மையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்த் பயன்படுத்திய கரப்பான்பூச்சி என்ற வாா்த்தையை எடுத்துக் கொண்டு, சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் நையாண்டி பிரசாரத்தைத் தொடங்கினாா். இந்த பிரசாரம் மக்கள் இயக்கமாக உருவெடுத்து, மத்திய அமைச்சரின் பதவியையே பறிக்கச் செய்துள்ளது.
Union Minister Dharmendra Pradhan resigned
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.