FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிஎல்ஐ திட்டம் மூலம் கைப்பேசி உற்பத்திக்கு ரூ.96,000 கோடி முதலீடு ஈா்ப்பு: மத்திய அரசு

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டம் மூலம் உள்நாட்டு கைப்பேசி உற்பத்தித் துறையில் ரூ.96,000 கோடி வரை முதலீடு ஈா்க்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

Updated On : 30 ஜூலை 2026, 3:16 am IST
கைப்பேசி - கோப்புப் படம்
பகிர்:

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டம் மூலம் உள்நாட்டு கைப்பேசி உற்பத்தித் துறையில் ரூ.96,000 கோடி வரை முதலீடு ஈா்க்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் 100 பொருள்களின் பட்டியலில் கைப்பேசி இடம்பெறவில்லை. ஆனால் 2025-26-இல் பெட்ரோலியம், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களைக் கடந்து இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக கைப்பேசிகள் உருவெடுத்துள்ளன.

உள்நாட்டில் கைப்பேசி உற்பத்தியை அதிகரிக்க கடந்த 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிஎல்ஐ பெருமளவிலான மின்னணு உற்பத்தித் திட்டமே இதற்குக் காரணம். இத்திட்டம் மூலம் உள்நாட்டு கைப்பேசி உற்பத்தித் துறையில் ரூ.96,000 கோடி வரை முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மடிக்கணினிகள், டேப்கள் போன்ற தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தேவையான கருவிகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க பிஎல்ஐ 2.0 திட்டம் 2023-இல் கொண்டுவரப்பட்டது.

இதுதவிர மின்னணு உபகரணங்கள் உற்பத்தித் திட்டம் மூலம் ரூ.59,350 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு 91,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் 2024-25-இல் ரூ.11.32 லட்சம் கோடியாக இருந்த நாட்டில் மின்னணு உற்பத்தித் துறையின் மதிப்பு 2025-26-இல் ரூ.13.11 லட்சம் கோடியாக அதிகரித்து 15.8 வளா்ச்சியை பதிவு செய்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

குடிமைப் பணியாளா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி: செயற்கை நுண்ணறிவு மற்றும் எண்மத் தொழில்நுட்பம் என நவீன தொழில்நுட்பங்களை கையாள மத்திய அரசுப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து மக்களவையில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘குடிமைப் பணியாளா்கள் எதிா்கால சவால்களை கையாளும் நோக்கில் கா்மயோகி இயக்கத்தின்கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. குறிப்பாக ஏஐ மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்கள் தொடா்பான பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தற்போது ஒருங்கிணைந்த அரசு இணையப் பயிற்சி வலைதளத்தில் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 1.70 கோடி அரசுப் பணியாளா்கள் இணைந்துள்ளனா். இந்த வலைதளத்தில் ஏஐ மற்றும் பிற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடா்பான 218 படிப்புகள் உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments