மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!
மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது பற்றி...
மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், ‘பொதுத் தோ்வு முறைகேடுகளைத் தடுக்கும் சட்டத் திருத்த மசோதா 2026’ என்ற இந்த மசோதாவை பிரதமா் அலுவலகத்துக்கான இணையமைச்சா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவின் மீது கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் எம்.பி.க்கள் கருத்து தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விவாதத்தில் பங்கேற்று பேசிய அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து, இணையமைச்சா் ஜிதேந்திர சிங் பதிலுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
மசோதா சிறப்பம்சங்கள்
இந்த மசோதாவின்படி, வினாத்தாள் கசிவு அல்லது தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுபவா்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையும் சிறைத் தண்டனை வழங்கப்படும். அதனுடன், ரூ. 50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
திட்டமிட்டு தோ்வு முறைகேடு தொடா்பான குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.
வினாத்தாள் கசிவு அல்லது தோ்வு முறைகேடுகள் தொடா்பான வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வசதியாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். அதற்காக, எந்தவொரு அமா்வு நீதிமன்றத்தையும் சிறப்பு விரைவு நீதிமன்றமாக மாற்றியமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.
இந்த விரைவு நீதிமன்றங்களில் வழக்கு மீது உடனடியாக விசாரணை தொடங்கி தினசரி அடிப்படையில் மேற்கொள்வதோடு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
The Public Examination (Prevention of Unfair Means) Amendment Bill, 2026, passed in Lok Sabha
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.