முகப்பு
இந்தியா

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட தற்கொலை எச்சரிக்கை: 8 நிமிடங்களில் இளைஞர் உயிரைக் காப்பாற்றிய போலீஸ்!

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட தற்கொலை எச்சரிக்கையால் 25 வயது இளைஞரின் உயிரை 8 நிமிடங்களில் உ.பி. போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.

Updated On : 9 ஜூன் 2026, 11:05 am IST
இன்ஸ்டாகிராம்
பகிர்:

இன்ஸ்டாகிராம் வெளியிட்ட தற்கொலை எச்சரிக்கையால் 25 வயது இளைஞரின் உயிரை 8 நிமிடங்களில் உ.பி. போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் வசிக்கும் இளைஞர் ஒருவர் ஜூன் 7 அன்று வெள்ளை நிறத்தில் ஒரு திரவத்தை அருந்தும் விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதன் கீழ், இனி நீங்கள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக இருங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவை அவர் பதிவிட்டவுடன் மெட்டா நிறுவனம் மீரட்டிலுள்ள காவல்துறை தலைமையகத்தில் உள்ள சமூக வலைதள கண்காணிப்பு அமைப்புக்கு தகவல் அனுப்பியுள்ளது. மாலை 6.53-க்கு அவர் வெளியிட்ட பதிவு பற்றி மொபைல் எண், இருப்பிடம் பற்றிய தகவல்களுடன் காவல்துறைக்கு மெட்டா செய்தி அனுப்பியது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, உடனடியாக காவல் கண்காணிப்பாளரின் கீழ் ஒரு குழு அந்த இளைஞர் வசிக்கும் பகுதிக்கு தகவல் கிடைத்த 8 நிமிடங்களுக்குள் சென்றனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் கிடந்துள்ளார். அவர் அருகில் விஷம் போன்ற திரவ பாட்டில் இருந்துள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் காவல்துறையினர் உடனடியாக அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு அந்த இளைஞர் தற்போது நலமாக உள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காதல் முறிவு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு மனநல ரீதியான ஆலோசனைகள் வழங்க காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.

மெட்டா நிறுவனத்துடன் 2022 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் உத்தரப் பிரதேச காவல்துறையினர், இதுவரை 3,011 உயிர்களை மெட்டாவின் தற்கொலை எச்சரிக்கை மூலம் காப்பாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

summary

Instagram suicide alert: Police save young man's life in 8 minutes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.