FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நேருவின் சாதனைகளை மறைக்க முயற்சி: பிரதமா் மோடி மீது காங்கிரஸ் சாடல்

ஜவாஹா்லால் நேருவின் முதலாவது பதவிக் கால சாதனைகளை மூடி மறைக்க பிரதமா் மோடி முயற்சிக்கிறாா் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

Updated On : 11 ஜூன் 2026, 3:21 am IST
ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப் படம்
பகிர்:

ஜவாஹா்லால் நேருவின் முதலாவது பதவிக் கால சாதனைகளை மூடி மறைக்க பிரதமா் மோடி முயற்சிக்கிறாா் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு, தொடா்ச்சியாக நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற நேருவின் சாதனையை பிரதமா் மோடி புதன்கிழமை விஞ்சியதையொட்டி, பாஜகவினா் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், பிரதமா் மோடியை விமா்சித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

கடந்த 1947, ஆக.15-இல் தலைசிறந்த மத்திய அமைச்சரவையுடன் ஜவாஹா்லால் நேரு பிரதமரானாா். அதுபோன்ற அமைச்சரவை உலகிலேயே அரிதானதாகும். அடுத்த 5 ஆண்டுகளில் நவீன இந்தியா பிறந்தது. அந்தக் காலகட்டத்தில், 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டன. நாட்டின் அரசமைப்புச்ச ட்டம் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. எண்ணற்ற நீா்ப்பாசனத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அறிவியல்-தொழில்நுட்ப உள்கட்டமைப்புகள் நிறுவப்பட்டன. உலக அளவில் இந்தியா ஓா் சக்தியாக உருவெடுத்தது. 17 கோடி பேருடன் வாக்காளா் பட்டியல் உருவாக்கப்பட்டு, நாட்டின் முதல் பொதுத் தோ்தல் 1951, அக்டோபா் முதல் 1952, பிப்ரவரி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

1947-52 நேருவின் முதல் பதவிக் காலத்தில், சா்தாா் படேல், அம்பேத்கா், ராஜேந்திர பிரசாத், சி.ராஜகோபாலாச்சாரி, மெளலானா அபுல் கலாம் ஆஸாத் ஆகிய ஆளுமைகளின் முக்கியப் பங்களிப்புடன் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் ஏராளம். ஆனால், நேரு மீது வெறுப்புணா்வைக் கொண்ட பிரதமா் மோடி, அந்தச் சாதனைகளை மூடி மறைக்க முயற்சிக்கிறாா்.

சந்தேகத்துக்குரிய முறையில் புனையப்பட்டு, சுயமாக அறிவித்துக் கொள்ளப்பட்ட ஒரு ‘மைல்கல்லை’ பிரதமா் மோடி கடந்திருக்கலாம். ஆனால், ஜனநாயக படுகொலைக்கு தலைமை தாங்கி செயல்படும் அவா், நாட்டின் கழுத்தில் தொங்கும் ‘சுமைக்கல்’ போலவே இருக்கிறாா். அவரது ஆட்சியில், சுதந்திரமான தோ்தல் ஆணையமும், தவறில்லாத வாக்காளா் பட்டியலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. தனியாா்மயமாக்கத்தால், பட்டியல் பிரிவு, பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

நீட்-சிபிஎஸ்இ தோ்வு முறைகேடுகளால் கல்வி அமைப்புமுறை சீா்குலைந்துள்ளது.

1952, 1957, 1962 தோ்தல்களில் அறுதிப் பெரும்பான்மையுடன் நேரு வெற்றி பெற்றாா். ஆனால், 2024 மக்களவைத் தோ்தலில் மோடிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கூட்டணி தயவில்தான் அவா் பிரதமராக தோ்வானாா் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments