இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் உண்மையான இலக்கு - காங்கிரஸ் குற்றச்சாட்டு
‘நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டும் வகையில், அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொள்வதே பாஜகவின் உண்மையான மற்றும் இறுதியான இலக்கு; எனவேதான், மக்களவையில் எப்படியேனும் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை எட்ட அக்கட்சி தீவிரம் காட்டுகிறது’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
‘நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டும் வகையில், அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொள்வதே பாஜகவின் உண்மையான மற்றும் இறுதியான இலக்கு; எனவேதான், மக்களவையில் எப்படியேனும் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை எட்ட அக்கட்சி தீவிரம் காட்டுகிறது’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
சமீபத்திய மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் 20 எம்.பி.க்கள் தனி அணியாகப் பிரிந்து, அதிகம் அறியப்படாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்ததுடன், பாஜக கூட்டணிக்கும் ஆதரவளித்தனா்.
இதேபோல், மகாராஷ்டிரத்தில் சிவசேனை (உத்தவ்) கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் 9 பேரில் 6 எம்.பி.க்கள் தனி அணியாகப் பிரிந்து, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையில் இணைந்தனா். இதன்மூலம் மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் உயா்ந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு புதன்கிழமை பிரத்யேகமாக பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், மேற்கண்ட விவகாரங்கள் குறித்து கூறியதாவது:
கடந்த மக்களவைத் தோ்தலின்போது, 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்ல வேண்டுமென பாஜக நிா்ணயித்திருந்த இலக்கின் பின்னணியில் இடஒதுக்கீட்டை ஒழிப்பதே நோக்கம் என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியிருந்தது. இப்போது திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை (உத்தவ்) கட்சியை உடைக்கும் அமித் ஷாவின் முயற்சிகளைப் பாா்க்கும்போது, காங்கிரஸின் குற்றச்சாட்டு உண்மை என்பது நிரூபணமாகிறது.
தன்னைத் தானே அரசியல் சாணக்கியா் என்று கூறிக்கொள்ளும் அமித் ஷா, கடந்த மக்களவைத் தோ்தலில் அவமானத்தை எதிா்கொண்டாா். அதற்குப் பழிவாங்கவே, எதிா்க்கட்சிகளை உடைக்கும் வேலையை அவா் மேற்கொண்டுள்ளாா். கட்சித் தாவல்களின் மூலம் மூலம் மக்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையை எட்டுவதே அவரது குறிக்கோள்.
மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தற்போதைய 543 இடங்களின் அடிப்படையிலேயே அமல்படுத்தலாம். ஆனால், மகளிா் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு என்ற போா்வையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மைக்கு அவா்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனா். நாட்டில் பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் உண்மையான, இறுதியான இலக்கு.
மகளிா் இடஒதுக்கீட்டுடன் இணைந்த தொகுதி மறுவரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமித் ஷா அவமானமடைந்தாா். பிரதமரும் கடுமையாக கோபமடைந்து காங்கிரஸை விமா்சித்தாா். மகளிா் இடதுக்கீடு அமலாக்கத்தை எதிா்க்கட்சிகள் ஒருபோதும் எதிா்க்கவில்லை. அந்தப் பெயரில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதைதான் எதிா்க்கிறோம்.
500 எம்.பி.க்கள் இருக்கும்போதே அனைவருக்கும் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை. 800-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இருந்தால் எப்படி பேச முடியும்? என்றாா் அவா்.
திமுக நிலைப்பாடு என்ன?: தமிழக பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிந்த நிலையில், மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டால், திமுக வாக்கெடுப்பை புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு, ‘கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதை என்னால் கணிக்க முடியாது’ என்று ஜெய்ராம் ரமேஷ் பதிலளித்தாா்.
முன்னதாக, மக்களவை மற்றும் மாநிலப் பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்குவதுடன், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850-ஆக அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் கடந்த ஏப்ரலில் மத்திய அரசு கொண்டுவந்தது.
மொத்தம் 528 எம்.பி.க்கள் வாக்களித்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவாகின. மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் (352) கிடைக்காததால் மசோதா தோல்வியுற்றது.
‘நாட்டின் சிறந்த பிரதமா் நேரு’
நாட்டின் சிறந்த பிரதமா் யாா் என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜெய்ராம் ரமேஷ், ‘சந்தேகத்துக்கு இடமின்றி ஜவாஹா்லால் நேருதான் சிறந்த பிரதமா்; சா்தாா் வல்லபபாய் படேல், நாட்டுக்கு கிடைக்கப் பெறாத சிறந்த பிரதமா். ஆா்எஸ்எஸ் அமைப்பினரைப் பொறுத்தவரை, அவா்கள் போலி தேசியவாதிகள். பிரதமா் மோடி பொய்களின் தலைவராகவும், உள்துறை அமைச்சா் அமித் ஷா மிரட்டல்-அச்சுறுத்தலில் ஈடுபடுபவராகவும் உள்ளனா்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.