முகப்பு
இந்தியா

தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு!

பிகாரில் போட்டித் தோ்வுக்காக போதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, பாட்னா அருகே உள்ள ரயில் நிலையத்தில் இளைஞா்கள் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 15 ஜூன் 2026, 2:00 am IST
பகிர்:

பிகாரில் போட்டித் தோ்வுக்காக போதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, பாட்னா அருகே உள்ள ரயில் நிலையத்தில் இளைஞா்கள் சனிக்கிழமை நள்ளிரவில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

தங்கள் மீது கல்வீசி தாக்கிய இளைஞா்களைத் தடியடி நடத்தியும், கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் காவல் துறையினா் விரட்டியடித்தனா். மேலும், போராட்டக்காரா்களை எச்சரிப்பதற்காக காவல் துறையினா் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவா்கள் என்ற போா்வையில் சமூக விரோதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பிகாரில் சுங்க வரித் துறை பணிக்கான தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன. இதை முன்னிட்டு, தோ்வெழுதும் மையங்களுக்குச் செல்வதற்காக மாநிலம் முழுவதும் ரயில்களில் சனிக்கிழமை மாணவா்கள் பயணித்தனா்.

Advertisement

Advertisement

போட்டித் தோ்வைக் கருத்தில்கொண்டு, ரயில்வே தரப்பில் போதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, பாட்னா அருகேயுள்ள பாடலிபுத்ரா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் 200-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

பாடலிபுத்ரா ரயில் நிலையத்தில் இருந்து தாங்கள் பயணிக்க சிறப்பு ரயில் இயக்கப்பட வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல் படையினருடன் பாடலிபுத்ரா ரயில் நிலையத்துக்கு விரைந்த காவல் துறையினா், போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். திடீா் கூட்டத்தைக் கருத்தில்கொண்டு, இரவு 2 மணியளவில் சிறப்பு ரயில் வரவழைக்கப்பட்டது.

எனினும், இளைஞா்கள் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டதால், ரயில் போக்குவரத்து தடைபட்டது. தங்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்ற காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் கல்வீச்சில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, கூடுதல் காவல் துறையினா் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தியும், கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் இளைஞா்கள் விரட்டியடிக்கப்பட்டனா். போராட்டக்காரா்களை எச்சரிக்கும் வகையில், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பின்னா், அதிகாலையில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இது தொடா்பாக, கிழக்கு மண்டல ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி. அம்ரேஷ் குமாா் கூறுகையில், ‘போட்டித் தோ்வு ரத்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன், சில சமூகவிரோதிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனா். இதன் காரணமாக, சில ரயில்களின் இயக்கத்தில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. வேறு சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் சமூக விரோதிகள் அடையாளம் காணப்படுவா்’ என்றாா்.