கேரளத்தில் துணை முதல்வர் பதவி? - ஐயூஎம்எல் விளக்கம்!
கேரளத்தில் துணை முதல்வர் பதவியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கோருவதாக வெளியான செய்திக்கு அக்கட்சி விளக்கம்...
கேரளத்தில் ஆட்சி அமைக்கவுள்ள காங்கிரஸ் கட்சியிடம் துணை முதல்வர் பதவியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் பி.எம்.ஏ. சலாம் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐயூஎம்எல் கட்சி துணை முதல்வர் பதவி கேட்பதாக வெளியான செய்திகளுக்கு அக்கட்சியின் கேரள மாநிலக் குழுவின் பொதுச்செயலாளர் பி.எம்.ஏ. சலாம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுபற்றி, வியாழக்கிழமை (மே 7) அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“துணை முதல்வர் விவகாரம் குறித்து காங்கிரஸ் கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை எழுந்தால் ஐயூஎம்எல் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும். மேலும், அமைச்சரவையில் இடம்பெறும் அனைத்து துறைகளும் முக்கியமானவை. ஐயூஎம்எல் சார்பில் யாரெல்லாம் அமைச்சர் பதவி வகிப்பார்கள் என்பது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் வென்ற ஐயூஎம்எல் கட்சி தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தர மறுப்பு தெரிவித்து திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.