உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!
உத்தரப் பிரதேசத்தில் கனமழை பாதிப்பால் 89 பேர் பலியானதற்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்...
உத்தரப் பிரதேசத்தில் கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் மின்னல் பாய்ந்து 89 பேர் பலியானதற்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த புதன்கிழமை (மே 13) மாலை பெய்த கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் மின்னல் பாய்ந்த சம்பவங்களால் 89 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 53 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அதிகப்படியாக பிரக்யாராஜ் மாவட்டத்தில் 21 பேரும், பதோஹியில் 14 பேரும், ஃபடேஹ்பூரில் 11 பேரும் பலியாகியுள்ளனர். மேலும், மழை தொடர்பான பாதிப்புகளால் சம்பால், ஹர்டோய், கான்பூர் டெஹாட், உன்னாவ் உள்ளிட்ட மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
Advertisement
இந்த நிலையில், உத்தரப் பிரதேச கனமழையால் பலியானவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இன்று (மே 14) இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பெரும் பேரழிவு மற்றும் உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பேரிடரில் 87-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்ததுடன் 114 கால்நடைகளும் பலியானது தெரியவந்துள்ளது.