மணிப்பூரில் இருந்து 132 என்சிசி மாணவர்களை மீட்ட இந்திய விமானப் படை!
மணிப்பூரில் நெடுஞ்சாலைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள நிலையில் 132 என்சிசி மாணவர்களை தனி விமானங்கள் மூலம் இந்திய விமானப்படை மீட்டது.
மணிப்பூரில் நெடுஞ்சாலைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ள நிலையில் இம்பாலிலிருந்து 132 என்சிசி மாணவர்களை தனி விமானங்கள் மூலம் கௌஹாத்தி மற்றும் ஜோர்காட்டிற்கு (அஸ்ஸாம்) இந்திய விமானப்படை அழைத்துச் சென்றது.
மணிப்பூர் தலைநகரான இம்பாலில் மே 11 முதல் 20 வரை நடைபெற்ற விமானப் பிரிவு என்சிசி முகாமில் கலந்துகொள்ள 132 என்சிசி மாணவர்கள் சென்றிருந்தனர். அவர்கள் அனைவரும் கௌஹாத்தி மற்றும் ஜோர்காட் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் மணிப்பூரில் நெடுஞ்சாலைகள் முடக்கம் காரணமாக அனைவரும் அங்கேயே சிக்கிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப் படை விமானங்களை அனுப்பி அவர்களை மீட்டு வந்தது.
இதுதொடர்பாக வடகிழக்கு மண்டல என்சிசி இயக்குநரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "பாதுகாப்பு காரணங்களுக்காக 132 என்சிசி மாணவர்கள் இந்திய விமானப்படையின் விமானங்கள் மூலம் மணிப்பூரில் இருந்து கௌஹாத்தி மற்றும் ஜோர்காட்டிற்கு அவசரகால அடிப்படையில் வெளியேற்றப்பட்டனர்" என்று தெரிவித்திருந்தது.
Advertisement
Advertisement
மாணவர்களை வெளியேற்ற 2 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் விங் கமாண்டர் கே. பன்மேய் தெரிவித்தார். “சாலை மறியல்கள் காரணமாக மாணவர்களை விமானம் மூலம் அழைத்து வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. வேறு எந்தக் காரணங்களும் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
’மணிப்பூரில் நிலவும் மோசமான சூழலால் ஜோர்காட் மற்றும் கௌஹாத்தியைச் சேர்ந்த மாணவர்களால் சாலை வழியாகத் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப இயலவில்லை. இதனால், இந்திய விமானப்படை துரிதமாக செயல்பட்டு தனி விமானங்கள் மூலம் மாணவர்களை மீட்டது பெற்றோர்களுக்குப் ஆறுதலையும் நிம்மதியையும் அளித்துள்ளது’ என்று என்சிசி அமைப்பின் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
’தடௌ' திருச்சபையின் மூன்று தலைவர்கள் மே 13 அன்று கொல்லப்பட்டதற்கும், நாகா பகுதிகளில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 14 'குக்கி' இன மக்களை மீட்க அரசு தவறியதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, குக்கி மக்கள் அடங்கிய அமைப்பு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இதேபோல், குக்கி போராளிகளால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் 6 நாகா இன மக்களை மீட்க மாநில அரசால் இயலாத நிலையில், நாகா மக்களின் அமைப்பு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
சூழ்நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும், அமைதியை மீட்டெடுக்கவும் அரசுக்கு ஆதரவளிக்க அனைத்துச் சமூகத்தினரையும் முதல்வர் யும்னம் கேம்சாந்த் சிங் வலியுறுத்தினார். மேலும், அரசின் மீது மக்களுக்கு மனக்குறை இருந்தாலும் முழு அடைப்பு, சாலை மறியல் அல்லது கடையடைப்பு போன்ற போராட்ட முறைகளைக் கையாள வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.