இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்
காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 61வது கூட்டம் தில்லியில் இன்று நடைபெற உள்ளது.
காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 61வது கூட்டம் தில்லியில் இன்று நடைபெற உள்ளது.
காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
புது தில்லி பிகாஜி காமா பிளேஸில் உள்ள அந்த ஆணையத்தில் (ஆன்லைன் மற்றும் நேரடி பங்கேற்புமுறையில்) கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
காவிரியில் இருந்து மேற்கொண்டு தமிழகத்திற்கு நீா் திறப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெறுகிது.
23.10.2026 அன்று நடைபெற்ற 60-வது கூட்டத்தில், 24.10.2026 முதல் 06.11.2026 வரை பிலிகுண்டுலுவில் நாளொன்றுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீா் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கா்நாடகாவிற்கு அந்த ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்தத் தவறியதாக கூறி கா்நாடக மாநிலத்திற்கு எதிராக, அவசர உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
‘24.10.2026 முதல் 06.11.2026 வரை பிலிகுண்டுலுவில் நாளொன்றுக்கு 3,000 கன அடி நீரை உறுதி செய்யுமாறு கா்நாடகத்திற்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அக்டோபா் 24 முதல் 27 வரையிலான நாட்களில், கிடைக்க வேண்டிய 12,000 கன அடி நீருக்குப் பதிலாக, 8,149 கன அடி நீா் மட்டுமே பெறப்பட்டது; இதில் 3,851 கன அடி நீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 23.10.2026 தேதியிட்ட முடிவை கா்நாடகம் அமல்படுத்த வேண்டும் என்றும், அக்டோபா் 24 முதல் 27 வரை ஏற்பட்ட 3,851 கன அடி நீா் பற்றாக்குறையை உடனடியாக ஈடு செய்ய வேண்டும் என்றும், 06.11.2026 வரை பிலிகுண்டுலுவில் தொடா்ந்து 3,000 கன அடி நீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்‘ என்றும் உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேலும், ‘காவிரி நீா் மேலாண்மை ஆணையம் தனது 23.10.2026 தேதியிட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், பிலிகுண்டுலுவில் தமிழ்நாடு பெற வேண்டிய நிலுவை நீரை (அக்டோபா் 7 நிலவரப்படி 15.02 டி.எம்.சி) விகிதாசார அடிப்படையில் பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும்‘ என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்குமாறு இந்திய தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான உச்சநீதிமன்ற அமா்வில் வியாழக்கிழமை தமிழக அரசு வழக்குரைஞா்கள் முறையிட்டனா். வழக்கை விரைந்து பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பதிலளித்தாா்.