FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காங்கிரஸ் கட்சிக்கான நன்கொடைகள் 75% சரிந்து ரூ. 131 கோடியாகக் குறைந்தது

காங்கிரஸ் கட்சிக்கான நன்கொடையானது 2025-26 நிதியாண்டில் ரூ. 20,000-க்கு மேல் கிடைத்த நன்கொடைகள் 75% சரிந்து ரூ. 131 கோடியாகக் குறைந்துள்ளது குறித்து...

34 வினாடிகள் முன்பு
காங்கிரஸ் கட்சிக்கான நன்கொடைகள் 75% சரிவு - கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 20,000-க்கு மேல் கிடைத்த நன்கொடைகள், 2025-26 நிதியாண்டில் 75% சரிந்து ரூ.131 கோடியாகக் குறைந்துள்ளன; இது கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான சரிவாகும்.

முந்தைய 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.20,000-க்கும் மேல் கிடைத்த நன்கொடைகள் ரூ. 517.39 கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ரூ. 130.69 கோடியாகக் குறைந்துள்ளது. இதில் 'புரூடன்ட் எலக்டோரல் டிரஸ்ட்' வழங்கும் நன்கொடைகள் 88% குறைந்துள்ளதே இந்த ஒட்டுமொத்த சரிவுக்கான முக்கிய காரணமாக உள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில், 2025-26 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 20,000-க்கு அதிகமான நன்கொடைகளாக ரூ. 130.69 கோடி கிடைத்துள்ளன. இது முந்தைய நிதியாண்டை விட சுமார் 75 சதவீதம் குறைவு என்றும், கடந்த பத்தாண்டுகளில் இத்தகைய நன்கொடைகளில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான சரிவு இது என்றும் பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 2024-25 நிதியாண்டில், காங்கிரஸ் கட்சி ரூ. 20,000-க்கு அதிகமான நன்கொடைகள் மூலம் ரூ. 517.39 கோடியைப் பெற்றிருந்தது. அதற்கு முந்தைய ஆண்டான 2023-24-ல் இந்தத் தொகை ரூ. 281.48 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த தொகையையும் கணக்கில் கொண்டால், 2025-26 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி பெற்ற நிதி, 2020-21-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும். 2024-25 ஆம் ஆண்டில், கூப்பன்கள் மூலம் மட்டுமே காங்கிரஸ் கட்சி ரூ. 350.12 கோடியைப் பெற்றுள்ளது.

கடந்த 12 நிதியாண்டுகளுடனான நன்கொடைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், இதற்கு முன்பு 2015-16 நிதியாண்டில் இத்தகைய கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது; அப்போது அதற்கு முந்தைய ஆண்டின் ரூ. 141.46 கோடியிலிருந்து சுமார் 86% சரிந்திருந்தது.

இந்தச் சரிவுக்கு 'புருடென்ட் எலக்டோரல் டிரஸ்ட்' வழங்கிய நன்கொடையில் ஏற்பட்டுள்ள பெரும் குறைப்புதான் முக்கியக் காரணம். காங்கிரஸ் கட்சிக்கு இந்த அறக்கட்டளை 2024-25 நிதியாண்டில் வழங்கிய நன்கொடை ரூ. 216.34 கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ரூ. 25 கோடியாகக் குறைந்துள்ளது. இது சுமார் 88% சரிவாகும்.

மற்ற முக்கிய நன்கொடையாளர்களில், ஸ்டார் சிமெண்ட் ரூ. 5 கோடியும், சஜ்ஜன் பஜன்கா ரூ. 4 கோடியும், பிரேம் குமார் பஜன்கா ரூ. 2 கோடியும் வழங்கியுள்ளது.

ஆண்டு வாரியாகப் பார்க்கும்போது இந்தச் சரிவு பெரிய அளவில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்திய நன்கொடைகளின் அளவு முந்தைய சில ஆண்டுகளை விட அதிகமாகவே உள்ளது. அந்த கட்சி 2020-21-ல் ரூ. 74.52 கோடியும், 2021-22-ல் ரூ. 95.46 கோடியும், 2022-23-ல் ரூ. 79.92 கோடியும் நன்கொடையாகப் பெற்றுள்ளது.

இதற்கிடையே, பாரதிய ஜனதா கட்சி 2024-25 நிதியாண்டில், தலா ரூ. 20,000-க்கு அதிகமான நன்கொடைகள் மூலம் மொத்தம் ரூ. 6,074.02 கோடி பெற்றுள்ளது. இது அதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடையை விட சுமார் 12 மடங்கு அதிகம். 2025-26 நிதியாண்டிற்கான பாஜகவின் நன்கொடை அறிக்கையை தேர்தல் ஆணையம் இன்னும் பொதுவெளியில் வெளியிடாததால் அது குறித்த விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

கடந்த 12 நிதியாண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவே அதிக நிதியைப் பெற்றுள்ளது.

The Congress received Rs 130.69 crore in donations exceeding Rs 20,000 in 2025-26, a nearly 75 percent decline from the previous financial year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.