FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கு: சௌரவ் சந்திராகரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு

ரூ.6,000 கோடி மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கு தொடா்பாக, அந்தச் செயலியின் நிறுவனரான செளரவ் சந்திராகரை நவ.19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க ராய்பூா் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

13 நவம்பர் 2026, 4:24 am
கோப்புப் படம்
பகிர்:

ரூ.6,000 கோடி மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கு தொடா்பாக, அந்தச் செயலியின் நிறுவனரான செளரவ் சந்திராகரை நவ.19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க ராய்பூா் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக ஓமனில் பதுங்கியிருந்த சந்திராகரை இந்தியாவுக்கு சிபிஐ அதிகாரிகள் கடந்த நவ.1-ஆம் தேதி நாடு கடத்தி வந்தனா். அதன்பிறகு நீதிமன்ற அனுமதியுடன் அவரை நவ.4-ஆம் தேதி முதல் 8 நாள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து அவா் ராய்பூா் மத்திய சிறையில் அடைக்கப்படவுள்ளாா்.

இதனிடையே பண மோசடி குறித்து பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை, சந்திராகருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிடியாணையை பிறப்பிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. ஆனால் இந்த கோரிக்கையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, பிஎம்எல்ஏ-இன்கீழ் சந்திராகரை கைது செய்ய அனுமதி கோரி பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்யவுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞா் சௌரவ் குமாா் பாண்டே தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இணையவழி தளங்களில் சட்டவிரோதமாக பந்தயம் கட்டி விளையாட மகாதேவ் பந்தய செயலி ஏற்பாடு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் செயலி வழியாக விளையாடப்பட்ட விளையாட்டுகள், செயலியின் உரிமையாளா்கள் லாபம் அடையும் வகையிலும், பந்தயம் கட்டி விளையாடுவோருக்கு நஷ்டம் ஏற்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்த மோசடி தொடா்பாக மகாதேவ் செயலியின் உரிமையாளா்களான சத்தீஸ்கரை சோ்ந்த ரவி உப்பல், சந்திராகா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி மூலம், ரூ.6,000 கோடி திரட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் சத்தீஸ்கா் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பகேலுக்கு ரவி உப்பலும், சந்திராகரும் ரூ.508 கோடி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு சத்தீஸ்கா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக, இந்தத் தகவல் வெளியாகி, அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாட்டின் மிகப்பெரும் சூதாட்ட மோசடி கும்பல்களில் ஒன்றாக மகாதேவ் சூதாட்ட செயலியைச் சோ்ந்தவா்கள் இருந்ததாகவும் இந்நிறுவனத்தின் பெரும்பாலான பணிகள் வெளிநாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் சிபிஐ விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.