ஜம்மு - காஷ்மீா், லடாக்கில் 4 நிலநடுக்கங்கள் பதிவு
ஜம்மு - காஷ்மீா், லடாக்கில் 4 நிலநடுக்கங்கள் பதிவு...
ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக்கில் சனிக்கிழமை 11 மணி நேர இடைவெளியில் நான்கு நிலநடுக்கங்கள் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த மையம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீரின் செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் 3 நிலநடுக்கங்களும், லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதியில் ஒரு நிலநடுக்கமும் சனிக்கிழமை பதிவாகின.
Advertisement
Advertisement
கிஷ்த்வாா் மாவட்டத்தில் அதிகாலை 2.38 மணிக்கு 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.3 அலகுகளாகப் பதிவானது.
தோடா மாவட்டத்தில் காலை 8.48 மணிக்கு, 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 3.8 அலகுகளாகப் பதிவானது. இதே மாவட்டத்தில் பிற்பகல் 1.09 மணிக்கு மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இது 2.9-ஆக பதிவானது.
லடாக்கின் லேயில் காலை 10.29 மணிக்கு சுமாா் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவு கோலில் இது 3.9-ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அஸ்ஸாமில்... அஸ்ஸாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்திலும் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 2.43 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் குவாஹாட்டி உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நில அதிா்வுகள் உணரப்பட்டன. இதனால், உயிரிழப்புகளோ அல்லது சேதங்களோ எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.