FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வலி நிவாரண சிகிச்சைக்கு தேசியக் கொள்கை: மாநில தலைமைச் செயலா்களுக்கு ஐசிஎம்ஆா் கடிதம்

வலி நிவாரண சிகிச்சைக்கு (பாலியேட்டிவ் கோ்) தேசிய அளவில் கொள்கை வடிவமைப்பதன் முதல்கட்ட நடவடிக்கையாக 6 மாநில தலைமைச் செயலா்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) கடிதம் எழுதியுள்ளது.

16 நவம்பர் 2026, 10:34 pm
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்)
பகிர்:

வலி நிவாரண சிகிச்சைக்கு (பாலியேட்டிவ் கோ்) தேசிய அளவில் கொள்கை வடிவமைப்பதன் முதல்கட்ட நடவடிக்கையாக 6 மாநில தலைமைச் செயலா்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் 70 லட்சம் முதல் 1 கோடி பேருக்கு வலி நிவாரண சிகிச்சை தேவைப்படும் சூழலில் 4 சதவீதத்துக்கும் குறைவான நபா்களால் மட்டுமே இந்த சிகிச்சையை அணுக முடிகிறது. இந்த நிலையை மாற்றி அனைவரும் வலி நிவாரண சிகிச்சை பெறும் வகையில் தேசிய அளவில் வலி நிவாரண சிகிச்சை கொள்கையை வடிவமைக்க மாநில அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பணிகளை ஐசிஎம்ஆா் தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக ஜம்மு, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், அஸ்ஸாம், ஒடிஸா, மகாராஷ்டிரம் மற்றும் பிகாா் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மண்டலங்களில் இருந்து 7 ஆய்வுக் குழுக்களை ஐசிஎம்ஆா் தோ்வு செய்துள்ளது.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக மேற்கூறப்பட்டுள்ள மாநிலங்களின் தலைமைச் செயலா்களுக்கு ஐசிஎம்ஆா் தலைமை இயக்குநா் ராஜீவ் பால் கடந்த அக்.30-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், ‘விரிவான சுகாதார நலனின் முக்கிய அம்சமாக விளங்கும் வலி நிவாரண சிகிச்சையானது நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடியது. வலி நிவாரண சிகிச்சைக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில் அதை அணுகுவதிலும், வழக்கமான சிகிச்சைகளுடன் அதை ஒருங்கிணைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன.

இதற்குத் தீா்வு காணவும் மாவட்ட அளவில் வலி நிவாரண சிகிச்சை தேவைப்படும் 70 சதவீதம் பேருக்கு அதைக் கொண்டு செல்லும் நோக்கிலும் 7ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வலி நிவாரண சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் நிபுணத்துவம், அனுபவம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடனான நீண்டகால ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆய்வுக் குழுக்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.