பணவீக்கம்! வெள்ளை அறிக்கை வெளியிட பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்!
வெள்ளை அறிக்கை வெளியிட பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தியது பற்றி..
பணவீக்கம் குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
Advertisement
Advertisement
ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகவும், எரிபொருள், மின்சாரம் மற்றும் உணவு அல்லாத பொருள்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணவீக்கம் குடும்பங்களின் வரவு.செலவுத் திட்டத்தைச் சீர்குலைப்பதாகவும், அன்றாட அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து வருகிறது. மொபைல் போன்கள், டிவி முதல் பிஸ்கட், உப்பு வரை பல பொருள்களின் விலை உயர்த்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பால் விலை உயர்ந்துள்ளதோடு, நெய், சமையல் எண்ணெய்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சில பொருள்களின் விலை உயர்த்தப்படுகிறது, அதே சமயம் சில பொருள்களின் பாக்கெட் அளவைக் குறைப்பதன் மூலம், நுகர்வோருக்குக் கிடைக்கும் பொருளின் அளவு குறைக்கப்படுகிறது. இதன் விளைவாக, சாமானிய மக்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் பணவீக்கத்தின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
அக்டோபர் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 6.09 சதவீதமாகவும், உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 8.94 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
தற்போதைய நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தொடரின் கீழ், சில்லறை விலை பணவீக்கம் இந்திய ரிசர்வ் வங்கியின் மேல் வரம்பான 6 சதவீதத்தைத் தாண்டியிருப்பது இதுவே முதல்முறை.
வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் அன்றாடத் தேவைகள் வரை அனைத்தும் தொடர்ந்து உயர்ந்து வருவதால், 61 சதவீத இந்தியக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவுகள் 20 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, பல வங்கிகள் வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
நல்ல நாள் வரும் என வாக்குறுதி அளித்து ஏமாற்றப்பட்ட நாட்டு மக்கள், பணவீக்கம் எனும் மோசமான நாள்களை இன்னும் எவ்வளவு காலம் அனுபவிக்க வேண்டும். விலையேற்றத்தின் கொடுமை போதும். மோடி அரசு இதற்குப் பதில் சொல்லட்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.