பாஜக வேட்பாளர் தோல்வி: கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் அகற்றம்!
ராஜஸ்தானில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததால் 50-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அகற்றப்பட்டது பற்றி...

ராஜஸ்தானில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததால் 50-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அகற்றப்பட்டதாக கிராமவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள டோங்க் மாவட்டத்தில் பீப்லு பகுதிக்குள்பட்ட ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் நிவாய் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராம் சஹாய் வர்மாவின் உதவியாளரான அலோக் சர்மாவின் மனைவி பிரியங்கா சர்மா பாஜக சார்பில் போட்டியிட்டார். இவர், தனது போட்டியாளரான காங்கிரஸ் வேட்பாளர் தன்னா லாலிடம் 751 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு அங்குள்ள ஒரு கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தெருவிளக்குகளை மின்சாரத் துறை ஊழியர்கள் அகற்றியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
நெடு நாள்களாக அப்பகுதி இருளில் இருந்ததாகவும் தேர்தல் பிரசாரத்தின் போது அக். 24 அன்று இந்தத் தெருவிளக்குகள் நிறுவப்பட்டு இருளைப் போக்கியதாகவும் மக்கள் கூறினர். இந்த நிலையில், பாஜக வேட்பாளர் தேர்தலில் தோற்றதால் தற்போது விளக்குகள் அகற்றப்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால், பீப்லுவில் உள்ள மின்சாரத் துறை உதவிப் பொறியாளர் கோவர்தன் சௌத்ரி, தெருவிளக்குகள் அனுமதியின்றி நிறுவப்பட்டதால் அவற்றை அகற்றியதாகத் தெரிவித்துள்ளார். அதேநேரம், மற்ற வார்டுகளிலும் அனுமதியின்றி நிறுவப்பட்ட தெரு விளக்குகளை அகற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தெரு விளக்குகள் அகற்றப்பட்டதில் தனக்கோ அல்லது வேட்பாளரான தனது உதவியாளரின் மனைவிக்கோ எந்தப் பங்கும் இல்லை என்று சட்டப்பேரவை உறுப்பினர் ராம்சஹாய் வர்மா குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.