நாங்கள் பிச்சைக்காரர்களா? சமாஜவாதிக்கு காங்கிரஸ் கேள்வி!
தொகுதிப் பங்கீட்டு விவகாரத்தில் சமாஜவாதியை காங்கிரஸ் விமர்சித்திருப்பது பற்றி...

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின் முதல்கட்டப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸுக்கு 26 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க சமாஜவாதி முன்வந்ததை காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அடுத்தாண்டு (2027) மே மாதம் 403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜவாதி, காங்கிரஸ் கட்சிகள் இடையே தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.
ஆரம்பத்தில் 181 தொகுதிகளைக் கேட்ட காங்கிரஸ், பின்னர் தான் போட்டியிட விரும்பும் சுமார் 130 தொகுதிகளின் பட்டியலை சமாஜவாதியிடம் சமர்ப்பித்தது. இதுதொடர்பாக சமாஜவாதி -காங்கிரஸ் இடையிலான அதிகாரபூர்வ முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை, புது தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி இல்லத்தில் நடைபெற்றது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில், காங்கிரஸுக்கு 26 தொகுதிகளை ஒதுக்க சமாஜவாதி முன்வந்துள்ளது.
Advertisement
Advertisement
காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐந்து வேட்பாளர்கள் அடங்கிய தனது முதல் பட்டியலை சமாஜவாதி கட்சி அறிவித்துள்ளது. இதில், நான்கு பேர் தற்போது எம்.எல்.ஏ-வாகப் பதவி வகித்து வருகின்றனர்.
இதில், பெஹத் மற்றும் சஹாரன்பூர் ஆகிய 2 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி தனக்கு வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், சமாஜவாதி கட்சி திடீரென அறிவித்து காங்கிரஸுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
இதுகுறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
“நாங்கள் அகிலேஷ் வழங்கும் பிச்சையை எதிர்பார்த்து நிற்கும் பிச்சைக்காரர்கள் அல்ல. பேச்சுவார்த்தையின்போதே தொகுதிகளை அறிவிப்பதற்கு, எதற்காக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?
இது எனது புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயம் இது. நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? எங்களை இப்படித்தான் நடத்துவீர்களா? பேச்சுவார்த்தைக்கு மத்தியில் நீங்களாகவே 26 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துவிட்டீர்கள்.
இதுதொடர்பாக கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும். ஆனால், சமாஜவாதி இப்போது செய்துகொண்டிருப்பது சரியானதல்ல.
இந்த அரசியல் போராட்டம் பாஜகவுக்கு எதிரானதா அல்லது காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதா என்பது குறித்து சமாஜவாதி தெளிவு பெற வேண்டும். அவர்கள் இப்படி நடந்துகொண்டால், கூட்டணி என்று ஒன்று எப்படி இருக்கும்? நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்கள் தலைமைதான் முடிவு செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார்.