முகப்பு

காவிரியில் 16 நாள்களுக்கு 2,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க உத்தரவு: தமிழகம் எதிர்ப்பு

காவிரியில் தமிழகத்துக்கு 16 நாள்களுக்கு விநாடிக்கு 2,000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.

26 நவம்பர் 2026, 4:46 am
காவிரியில் 16 நாள்களுக்கு 2,000 கனஅடி நீர் மட்டுமே திறக்க உத்தரவு: தமிழகம் எதிர்ப்பு
காவிரி நீர் - கோப்புப் படம்
பகிர்:

காவிரியில் தமிழகத்துக்கு 16 நாள்களுக்கு விநாடிக்கு 2,000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. அதே கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுக்கு தனது எதிர்ப்பை தமிழக அரசு பதிவு செய்தது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 62-ஆவது கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்.கே. ஹல்தார் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் ஐஏஎஸ் அதிகாரி பியூஷ் சிங் தலைமையில் இந்த கூட்டம் நேரடி பங்கேற்பு மற்றும் காணொலி வாயிலாக நடைபெற்றது.

தமிழக அரசின் சார்பில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில நீர்வளத் துறைச் செயலர் பிரசாந்த் மு. வடநேரே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள பியூஷ் சிங்கிற்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கூட்டத்தில் காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணியனும் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து, கடந்த நவ. 21 முதல் 16 நாள்களுக்கு பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 2,000 கன அடி நீரை கர்நாடகம் திறந்துவிட ஆணையம் உத்தரவிட்டது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிலிகுண்டுலுவில் 2,000 கன அடி நீரை மட்டுமே திறந்துவிடும் தற்காலிக முடிவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 62-ஆவது கூட்டத்தில் தமிழ்நாடு தனது எதிர்ப்பைப் பதிவு செய்தது. இக்கூட்டத்தில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 147-ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தற்காலிக முடிவை ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதன்படி, கர்நாடக மாநிலம் பிலிகுண்டுலுவில் 21.11.2026 முதல் 16 நாள்களுக்கு 2,000 கன அடி நீரை மட்டுமே திறந்துவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக நீர்வளத் துறைச் செயலரும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அரசின் உறுப்பினருமான பிரசாந்த் வடநேரே, மனுவை சமர்ப்பித்தார்.

தமிழ்நாட்டின் கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமலேயே, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் முடிவை ஆணையம் ஏற்றுக்கொண்டதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு பின்வரும் ஆட்சேபணைகளை எழுப்பியது: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் முடிவுகள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பு அல்லது அந்த அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட தரவுகளுடன் ஒத்துப்போகவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு விளக்கம் கேட்டபோது, அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. மாறாக, தெளிவற்ற "தற்போதைய கள நிலவரங்களை' மேற்கோள்காட்டி தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி, நீர்ப் பற்றாக்குறை உள்ள ஆண்டுகளில், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரின் அளவை விகிதாசார அடிப்படையில் குறைத்து வழங்க வேண்டும். பற்றாக்குறை சதவீதம் கணக்கிடப்பட்டு, பிலிகுண்டுலுவில் தமிழ்நாடு பெற வேண்டிய விகிதாசார பங்கு மதிப்பிடப்பட்டிருந்தும், அந்த அளவை உறுதி செய்யுமாறு கர்நாடகத்துக்கு அறிவுறுத்தப்படவில்லை. பற்றாக்குறை சதவீதத்தை கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட முறை ஏற்புடையதல்ல என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துகொண்டே, இந்த ஆட்சேபத்தை தமிழ்நாடு எழுப்பியது.

நீர்ப் பற்றாக்குறை உள்ள ஆண்டுகளில், இந்திய அரசின் 1.06.2018 தேதியிட்ட அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நீர்வரத்து மதிப்பீட்டின் அடிப்படையில் பற்றாக்குறை சதவீதத்தை கணக்கிட வேண்டும். இந்த இக்கட்டான ஆண்டில், கர்நாடகம் தனக்குரிய பங்கிற்கும் மேலாக நீரைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தனக்கு சேர வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.