தொகுதி மறுவரையறை! திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய கார்கே அழைப்பு!
தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ள சூழலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய காங்கிரஸ் அழைப்பு...

தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள சூழலில், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவை நவ. 30 ஆம் தேதியும், மாநிலங்களவை டிச. 2 ஆம் தேதியும் சிறப்பு அமர்வாகக் கூடவுள்ளதாக, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார்.
இந்த சிறப்புக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மத்திய அரசு மீண்டும் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டுள்ள மசோதாக்களை எதிர்ப்பதற்கு, திமுக, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றிணைவதற்கான பேச்சுவார்த்தை மேற்கொள்ள, கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் மற்றும் திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், வரும் சனிக்கிழமை (நவ. 28) தில்லியிலுள்ள கார்கேவின் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே, தொகுதி மறுவரையறை குறித்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.