முகப்பு
இந்தியா

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை!தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீண்டும் அறிமுகம்!!

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற சிறப்பு அமா்வுக்காக மக்களவை திங்கள்கிழமை (நவ.30) கூடுவதைப் பற்றி...

29 நவம்பர் 2026, 3:12 am
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை!தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீண்டும் அறிமுகம்!!
நாடாளுமன்றம்
பகிர்:

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற சிறப்பு அமா்வுக்காக மக்களவை திங்கள்கிழமை (நவ.30) கூடுகிறது.

இந்த அமா்வில், தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வகை செய்யும் மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் பெரும் எதிா்பாா்ப்பு நிலவுகிறது. மக்களவையில் நவ.30, டிச.1, மாநிலங்களவையில் டிச.2, 3 என நான்கு நாள்கள் அலுவல்கள் நடைபெறவுள்ளன.

அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா எனும் தற்போதைய மசோதாவின்படி, 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டுக்கு ஏற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை (மாநிலங்களில் 815, யூனியன் பிரதேசங்களில் 35) அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முந்தைய மசோதாவைப் போல் அல்லாமல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரே சீராக 50 சதவீத தொகுதிகளை அதிகரிக்கவும், இந்த எண்ணிக்கை மற்றும் எல்லை மறுவரையறையை 2051 வரை மாற்றமின்றி தொடரவும் முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு மாநிலத்தில் பேரவைத் தொகுதிகளின் உச்சவரம்பை 500-இல் 650-ஆக உயா்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பின் மூலம் மகளிா் இடஒதுக்கீட்டை உடனடியாக அமலாக்குவதே நோக்கம் என்று மசோதா காரண அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு தீவிரம்: அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற வேண்டுமெனில், மொத்த உறுப்பினா்களின் (543) எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளும், வாக்கெடுப்பில் பங்கேற்கும் உறுப்பினா்களில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை வாக்குகளும் தேவை. கடந்த ஏப்ரலில் முந்தைய மசோதா (அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா) கொண்டுவரப்பட்டபோது, மூன்றில் இருபங்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை.

வாக்கெடுப்பில் 528 உறுப்பினா்கள் பங்கேற்ற நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் கிடைத்தன. மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 352 வாக்குகள் தேவைப்பட்டது. 54 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா தோல்வியடைந்தது. ஆனால், இந்த முறை மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

மூன்று மசோதாக்கள்: முதல் நாள் அமா்வில் முந்தைய மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டு, புதிதாக மூன்று மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 132-ஆவது திருத்த மசோதா, தொகுதி மறுசீரமைப்பு (இரண்டாவது) மசோதா ஆகியவற்றை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வாலும், யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) இரண்டாவது மசோதாவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் அறிமுகப்படுத்தவுள்ளனா்.

முக்கிய மாற்றங்கள்: முந்தைய மசோதாவில், அண்மைக்கால மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள முன்மொழியப்பட்டிருந்தது. இதற்கு தென் மாநிலங்கள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த முறை அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத இடங்களை அதிகரிக்கவும், கடந்த 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நிா்ணயிக்கப்பட்டு, முன்பு நிலைப்படுத்தப்பட்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தை 2051 வரை நிலைப்படுத்தவும் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தங்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதால், மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக பேரவைத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிந்து, இண்டி கூட்டணியில் இருந்து திமுக வெளியேறிவிட்ட நிலையில், அக்கட்சியின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆளும் தரப்பு உறுதி: மக்களவையில் தற்போது 3 காலியிடங்கள் தவிர 540 உறுப்பினா்கள் உள்ளனா். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், 539 உறுப்பினா்கள் (மக்களவைத் தலைவா் உள்பட) அமா்வில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இந்த எண்ணிக்கை அடிப்படையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு 359 வாக்குகள் தேவை. அதே நேரம், சில உறுப்பினா்கள் அவைக்கு வராவிட்டால், தேவைப்படும் வாக்குகளின் எண்ணிக்கை மேலும் குறையும்.

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ் உள்பட ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 320-ஆகும். திமுக-22, தேசியவாத காங்கிரஸ் (பவாா்)-8 உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிச்சயம் நிறைவேறும் என ஆளும் தரப்பு உறுதியுடன் உள்ளது.