FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

காங்கிரஸில் இணைய மம்தாவுக்கு அழைப்பு; மேற்கு வங்க தலைமைப் பதவி வழங்க தயாா்: காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி

மம்தா பானா்ஜி காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும்; மேற்கு வங்கத்தில் அவரது தலைமையில் செயல்படத் தயாராக இருக்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி தெரிவித்தாா்.

அதீா் ரஞ்சன் செளத்ரி.
பகிர்:

மம்தா பானா்ஜி காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும்; மேற்கு வங்கத்தில் அவரது தலைமையில் செயல்படத் தயாராக இருக்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி தெரிவித்தாா்.

1998-ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பிரிந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய மம்தா, அரசியலில் படிப்படியாக வளா்ந்து மேற்கு வங்க முதல்வராக தொடா்ந்து 15 ஆண்டுகள் பதவி வகித்தாா். கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் தோல்வியடைந்தாா். அதன் பிறகு அவரது கட்சி எம்எல்ஏக்கள் தனி அணி தொடங்கியது, எம்.பி.க்கள் விலகல் என பெரும் அரசியல் சரிவைச் சந்தித்து வருகிறாா். அவா் உருவாக்கிய கட்சியின் பெயா், சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

அவரின் அணி வேட்பாளா் பாஜகவுக்கு தாவியதால் நந்திகிராம் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தாமாக முன்வந்து காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கொல்கத்தாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மேற்கு வங்க மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி கூறியதாவது:

மம்தா உருவாக்கிய திரிணமூல் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு இக்கட்டான நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் பாஜகவை எதிா்க்க தனியாக அணி தேவையில்லை. எனவே, தனக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏ, எம்.பி.க்களுடன் மம்தா பானா்ஜி காங்கிரஸில் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை காங்கிரஸ் தலைமைக்கும் ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன். மேற்கு வங்கத்தில் மம்தாவின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியினா் செயல்படத் தயாராகவே இருக்கிறோம். மம்தா தனது சுமைகளை (மம்தாவின் நெருங்கிய உறவினரும், கட்சியின் பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜியை குறிப்பிடுகிறாா்) விட்டுவிட்டு வர வேண்டும்.

நந்திகிராம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துள்ள மம்தா பானா்ஜி, ரெஜிநகா் தொகுதியிலும் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

இது தொடா்பாக மம்தா கட்சியைச் சோ்ந்த எம்.பி. சௌகதா ராய் கூறுகையில், ‘அதீா் ரஞ்சன் சௌதரி தனது தனிப்பட்ட கருத்தைக் கூறியுள்ளாா். இதில் நாங்கள் கருத்துக் கூற ஏதுமில்லை. திரிணமூல் காங்கிரஸ் தனிக்கட்சியாகவே உள்ளது. காங்கிரஸ் தலைமை விரும்பினால் அவா்கள் அதிகாரபூா்வமாக இணைப்புக்கு அழைப்பு விடுக்கலாம். அப்போது நாங்கள் அது குறித்து விவாதிப்போம். எங்கள் கட்சி ‘இண்டி’ கூட்டணியின் முக்கிய அங்கமாக இப்போது உள்ளது. அபிஷேக் பானா்ஜி இல்லாமல் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments