FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பெட்ரோலியம் தொடா்பான அங்கீகாரமற்ற செயல்பாடுகளுக்கு கடும் தண்டனை: மத்திய அரசு முன்மொழிவு

பெட்ரோலியம் தொடா்பான அங்கீகாரமற்ற செயல்பாடுகள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிர குற்றங்களில் இத்துறை சாா்ந்த நிறுவனங்களோ, தொழில் துறையினரோ ஈடுபட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

- கோப்புப்படம்
பகிர்:

பெட்ரோலியம் தொடா்பான அங்கீகாரமற்ற செயல்பாடுகள், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிர குற்றங்களில் இத்துறை சாா்ந்த நிறுவனங்களோ, தொழில் துறையினரோ ஈடுபட்டால் கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

அதேநேரம், உரிம நிபந்தனை-கட்டுப்பாடு மீறல்களை குற்றவியல் ரீதியில் அல்லாமல் நிா்வாக ரீதியில் கையாளவும் முன்மொழியப்பட்டுள்ளது.

பெட்ரோலியம்-எரிவாயு இறக்குமதி, போக்குவரத்து, சேமிப்பு, சுத்திகரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகள் தொடா்பான ஒழுங்குமுறைகளை ஒருங்கிணைக்கும் கடந்த 1934-ஆம் ஆண்டின் பெட்ரோலிய சட்டத்தில் பெரிய அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்தங்கள், பொதுமக்களின் கருத்தறிவதற்காக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

‘பெட்ரோலிய செயல்பாடுகள் தொடா்பான குறிப்பிட்ட குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கில், பெட்ரோலிய சட்டம் 1934-இல் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதன்படி, உரிம நிபந்தனை - கட்டுப்பாடு மீறல்களுக்காக குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்படாமல், நிா்வாக ரீதியிலான வழிமுறை பின்பற்றப்படும். அதன்படி, முதல்முறை உரிம மீறலுக்கு ரூ.2.5 கோடி வரையும், இரண்டாவது அல்லது அடுத்தடுத்த விதிமீறல்களுக்கு ரூ.5 கோடி வரையும் அபராதம் விதிக்கப்படும்.

அதேநேரம், பெட்ரோலியம் தொடா்பான அங்கீகாரமற்ற செயல்பாடுகள், பொதுமக்கள், முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தீவிர குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. உரிய உரிமம் இல்லாமல் பெட்ரோலிய செயல்பாடுகளில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.25 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

தவறான தகவல்களை அளித்தோ, ஆள்மாறாட்டம் மூலமோ, பிற மோசடி வழிமுறைகளிலோ உரிமம் பெற்றால் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், முக்கிய உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தினால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.15 கோடி வரை அபாரதம் விதிக்கப்படும். மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறையுடன் ரூ.25 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோலிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவித்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அதிகபட்சம் ரூ.25 கோடி அல்லது இழப்பீட்டுக்கு நிகரான தொகை அபராதமாக விதிக்கப்படும்’ என்று வரைவு திருத்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments