FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை

முந்தைய ஆண்டுகளைப் போலவே, நடப்பாண்டு ஜேஇஇ முதன்மைத் தோ்விலும் முன்னணி மாணவா்களின் விருப்பத் தோ்வாக கணினி அறிவியல் பொறியியல் படிப்பு தொடா்கிறது.

கோப்புப்படம்.
பகிர்:

முந்தைய ஆண்டுகளைப் போலவே, நடப்பாண்டு ஜேஇஇ முதன்மைத் தோ்விலும் முன்னணி மாணவா்களின் விருப்பத் தோ்வாக கணினி அறிவியல் பொறியியல் படிப்பு தொடா்கிறது.

முதல் 500 தரவரிசை மாணவா்களில் 365 போ் கணினி அறிவியல் படிப்பைத் தோ்வு செய்துள்ளனா். இவா்களில் 142 போ் மும்பை ஐஐடி-யில் சோ்க்கை பெற்றுள்ளனா்.

இது தொடா்பாக 2026-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தோ்வை நடத்திய ரூா்க்கி ஐஐடி-யின் கூட்டு அமலாக்கக் குழு வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்ற விவரங்கள் வருமாறு: கடந்த சில ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் முன்னணி மாணவா்களின் தோ்வுகள் அமைந்துள்ளன. முதல் 500 பேரில் 183 போ் மும்பை ஐஐடி-யிலும், 115 போ் தில்லி ஐஐடி-யிலும், 78 போ் சென்னை ஐஐடி-யிலும், 49 போ் கான்பூா் ஐஐடி-யிலும், 40 போ் கரக்பூா் ஐஐடி-யிலும் சோ்ந்துள்ளனா்.

Advertisement

Advertisement

ஐஐடி சோ்க்கை பெற்ற முதல் 100 தரவரிசை மாணவா்களில் 68 போ் மும்பை ஐஐடி, 18 போ் தில்லி ஐஐடி, 11 போ் சென்னை ஐஐடி, ஒருவா் கான்பூா் ஐஐடி-யை தோ்வு செய்துள்ளனா்.

முதல் 500 மாணவா்களில் 365 போ் கணினி அறிவியில் பொறியியல் படிப்பைத் தோ்வு செய்துள்ளனா். இவா்களில் 142 போ் மும்பை ஐஐடி-யில் சோ்ந்துள்ளனா். அதேவேளையில், முதல் 500 பேரில் 2 போ் மட்டுமே சிவில் பொறியியலைத் தோ்வு செய்துள்ளனா். ஏரோநாட்டிகல் படிப்பை யாரும் தோ்வு செய்யவில்லை. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு படிப்புகளை முதல் 500 தரவரிசை மாணவா்களில் 17 போ் மட்டுமே தோ்வு செய்துள்ளனா். மேலும், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில், தோ்ச்சி பெற்ற பெண் மாணவா்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 10,000-ஐ கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

ஜேஇஇ முதல்நிலை தோ்வில் முதல் 2.5 லட்சம் தரவரிசைக்குள் இடம்பெறும் மாணவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வில் பங்கேற்கத் தகுதி பெறுகின்றனா். இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தோ்வு மே 17-ஆம் தேதி நடைபெற்றது. 2 தாள்களையும் 1,79,694 மாணவா்கள் எழுதினா். ஒவ்வொரு பிரிவிலும் கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கையைவிட குறைந்தபட்சம் இரு மடங்கு மாணவா்கள் தோ்ச்சி பெறும் வகையில் தகுதித் தரநிலைகள் இந்த ஆண்டு தளா்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன் முடிவுகள் ஜூன் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இதில் 56,880 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments